Thottal Thodarum

Mar 3, 2011

சினிமா வியாபாரம்-2-11

பகுதி 11
ஆம் தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான்.
டால்பி டிஜிட்டல் சர்ரவுண்ட் சவுண்ட் எனும் புதிய டிஜிட்டல் ஒலியமைப்பு உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில், கமல் அபிராமி இராமநாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஏன் நம் தியேட்டர்கள் அந்த ஒலியமைப்பை ஏற்படுத்தக்கூடாது? என்று கேட்ட போது, அபிராமி இராமநாதன் அவர்கள் “நான் அதை நிறுவுவதற்கு தயார். ஆனால் அந்த தொழில் நுட்பத்தில் தமிழில் எத்தனைப் பேர் படமெடுக்கிறார்கள்? என்று கேட்டவுடன், கமல் தான் எடுப்பதாய் சொல்லி ஆரம்பித்தப்படம் தான் குருதிப்புனல். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் ஒலியமைப்புடன் வந்த படம். அபிராமி தியேட்டரில் அதை நிறுவ ஆரம்பித்ததும், தேவி தியேட்டரும், ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர்களு டால்பியை நிறுவ ஆரம்பித்தார்கள். அப்போது மெல்கிப்சனின் ஒரு படத்தை டால்பி டிஜிட்டல் பிரிண்டோடு எடுத்து வந்து குருதிப்புனல் வருவதற்கு முன்னால் திரையிட்டு, அந்த ஒலியமைப்பின் சிறப்பை மக்களிடையே சேர வைத்தார்கள்.பின்பு குருதிப்புனல் இந்த எல்லா தியேட்டர்களிலும் வெளியானது. இந்திய அளவில் 1942 லவ் ஸ்டோரி படம் தான் முதல் டால்பி டிஜிட்டல் என்று நினைக்கிறேன்.

அதே போல எல்லாத் தியேட்டர்களும் குடோன்களாகவோ, அல்லது திருமண மண்டபமாக மாறிக் கொண்டிருந்த வேளையில் வரிசையாய் அலங்கார், ஆனந்த் போன்ற் தியேட்டர்களும் ரியல் எஸ்டேட் புயலில் மாட்டி விலை போய்க் கொண்டிருந்த நேரத்தில் சத்யம் தியேட்டரும் இடித்து தரை மட்ட்மாகியிருக்க வேண்டியது. ஃபிரிவில்லி இரண்டாம் பாகம் இரவுக் காட்சி பார்த்துவிட்டு, மிகக் கவலையோடு அந்த தியேட்டர் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

எவ்வளவு சிறந்த படங்களை அங்கு பார்த்திருப்பேன். அந்த தியேட்டரில் கடைசி படம் ஃபீரிவில்லிதானென்று தெரிந்து கொண்ட போது கொஞ்சம் இடிந்துதான் போனேன். சினிமாவின் மோசமான காலங்களில் அதுவும் ஒன்றாக இருந்த நேரம். தியேட்டரை முழுவதும் இடித்துவிட்டு, இப்போது சத்யம் தியேட்ட்ர் கார் பார்க்கிங் இருக்குமிடத்தில், ஓட்டல் கட்ட கடக்கால் கூட போட ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையின் ஒரு முக்கிய திரையரங்கு காம்ப்ளெக்ஸின் வாழ்வு முடியப் போகிறது என்று வருந்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்தது. ஆனால் அந்நிகழ்வே இன்றைய தமிழ் சினிமாவிற்கான புதிய திரையரங்கு கான்செப்டை உருவாக்கியது என்றால் மிகையல்ல..

சத்யம் தியேட்டர் அதிபரின் மரணம் தான் அந்த சோக நிகழ்வாகும். ஆந்திராவில் காங்கிரஸில் பிரபலமானவரும், தொழிலதிபராகவும் இருந்த அவரை, நக்ஸலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்நேரத்தி அவர்களது வியாபார விஸ்தரிப்புகள் எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. அந்நேரத்தில் வெளிநாட்டில் இருந்த அவரது மகன் திரு கிரண் ரெட்டி நிறுவனங்களில் பொறுப்பை ஏற்று எல்லாப் நிறுவனங்களையும் தன் பார்வையில் கொண்டு வந்தார். வெளிநாட்டி படித்து வளர்ந்தவரான அவருக்கு ஏன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல் சிறந்த ஒளி,ஒலி, இருக்கை அமைப்பு, சுற்றுச்சூழலை நம் மக்களுக்கு தரக்கூடாது என்று யோசித்து ஆரம்பித்ததுதான் இன்றைய சத்யம் மல்ட்டிப்ளெக்ஸுக்கான முதல் நிலை.

தியேட்டர்களை மீண்டும் திறப்பதாக முடிவெடுத்தாகிவிட்டது. அன்றைய காலகட்டத்தில் முதன் முறையாய் ஒரு வழக்கமான திரையரங்கு அனுபவத்திலிருந்து ஒரு வித்யாசமான அனுபவத்தை தர, பெரிது படுத்தப்பட்ட திரைகள், தேங்காய் நார் குஷன் போட்டு இருந்த இருக்கைகளுக்கு பதிலாய் ஃபோம் குஷன் சீட்டுகள், டால்பி மற்றும் டி.டி.எஸ் எனப்படும் புதிய ஒலியமைப்பு தொழில்நுட்பங்கள். மல்ட்டிகலர் சுவர்கள் என்று பார்வையாளர்களும் ஒரு புதிய அனுபவத்தை தரத் தயாரானார்கள். திரையரங்கை புதுப்பித்து முதலில் வெளியான தமிழ் திரைப்படம் கமல், ஷங்கர், இணைந்த இந்தியன் திரைப்படம். அன்றைய சூப்பர் ஹிட்டான அத்திரைப்படம் சத்யம் திரையரங்கில் 150 நாட்களுக்கும் மேலாக ஓடியது.

இப்படி தொழில் நுட்பங்கள் துரிதமாய் வளந்து கொண்டிருந்த நாளில் எங்கள் திரையரங்கில் டி.டி.எஸ், ஏசி ஏதுமில்லாததால் பெரிய படங்களை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரிய படத்தை எங்கள் திரையரங்கில் திரையிட வாய்ப்பு கிடைத்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

Anonymous said...

அலங்கார் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட டெர்மினேட்டர் - 2 கட் அவுட்..அர்னால்ட் பைக்கில் அமர்ந்தவாறு..இன்றும் நினைவில். 90 களில் ஜுராசிக் பார்க் வந்த பொழுது பால்கனி டிக்கட் விலை 12. இன்று 120. கிரண் ரெட்டியின் துணிச்சலான முடிவு இன்று வெற்றி சரித்திரமாய்.

உலக சினிமா ரசிகன் said...

காரைக்குடியில் பாண்டியன் தியேட்டர் 90 சதவீதம் சத்யம் தரம்.ஆனால் டிக்கெட் ரூ.70,50,30 மட்டுமே.

pichaikaaran said...

தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் ஒலியமைப்புடன் வந்த படம்."

அனால் அதை மட்டுமே நம்பி , வேறு சிறப்புகள் இல்லாமல் எடுக்கப்பட்டதால், அந்த படம் கேவலமான தோல்வி அடைந்தது என்ற வரலாற்று உண்மையை சொல்லாதது ஏன் ?

அபோது வந்த முத்து சரித்திரம் படைத்தது ....

pichaikaaran said...

தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான். "

அப்படியா? தமிழ் சினிமாவுக்கு லாபம் தரக்கக் கூடிய வகையில் எத்தனை படம் தந்தார்? உலக தரத்தில் எத்தனை படம் தந்தார் என லிஸ்ட் தரவும...

பாலா said...

டால்பி டிஜிடல் வந்து 2-3 படம் வெளிவருவதற்குள்ளயே... தமிழின் முதல் dts படம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன் சங்கர்.

ராம்கி நடிச்சப் படம். ப்ளாக் மேஜிக்/மந்திர தந்திர டைப். பேர் மறந்துடுச்சி. கருப்புக் குதிரை, கருப்பு நிலா.. மாதிரி எதோ ஒரு எழவு.

என்னைக் கேட்டா, dts தான் மக்களை திரும்ப தியேட்டர் பக்கம் போக வச்சதுன்னு நினைக்கிறேன்.

10 லட்சம் போட்டு, தியேட்டர் சவுண்டை மாத்தினதா ஒரு தியேட்டர் ஓனர் ஆ.வி-ல பேட்டி கொடுத்த நியாபகம் இருக்கு.

அருண் said...

ஓ அதான் மேட்டரா?நல்லாயிருக்கு,தொடருங்கள்.
-அருண்-

அமர பாரதி said...

கேபிள், முதலாவது பாகத்தில் இருந்த பொதுவான தமிழ் சினிமா வியாபார தகவல்கள் இரண்டாவது பாகத்தில் குறைவே. சென்னை சினிமா அரங்குகள் மற்றும் சென்னையை மட்டுமே தகவல்கள் அதிகம் உள்ளது.

கானா பிரபா said...

ராம்கி நடிச்ச அந்தப் படம் கறுப்பு ரோஜா தமிழின்முதல் DTS