click here

TT

Thottal Thodarum

Nov 6, 2012

Luv Shuv Tey Chicken Kurana


ஓமி பத்து வருடங்களுக்கு பிறகு லண்டனிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறவன். வீட்டில் உள்ள அனைவருக்கும் இவனது வருகை சந்தோஷத்தைக் கொடுக்க, அவனுடய மாமாவுக்கு மட்டும் கோபம். சொல்லாமல் கொள்ளாமல் போனதால். குடும்பமே ஓமி லண்டனில் பெரிய அளவில் வக்கிலாய் ப்ராக்டீஸ் செய்து சம்பாதித்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நிஜத்தில் ஓமி லண்டனில் நம்மூர் லோக்கல் தாதாவிடம் கடன் பட்டு அதை அடைக்க, தாய்நாடு திரும்பி சொத்தை விற்று அடைக்கலாம் என்ற ப்ளானில் வர, ஆனால் இங்கே ப்ரச்சனை தாண்டவமாடுகிறது. குடும்ப பிஸினெஸான தாபா தள்ளாடிப் போய் கிடக்கிறது. அதற்கு காரணம் தாபாவின் ஸ்பெஷாலிட்டி அயிட்டமான சிக்கன் குரானா. அதை செய்யும் ரெஸிபி தெரிந்த தாத்தாவுக்கு மெமரி லாஸ் ஆகி மரமாய் உட்கார்ந்திருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பமே முழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், கடன்காரன்கள் துரத்தல், இன்னொரு பக்கம் தாத்தாவிடமிருந்து ரெஸிப்பி வாங்கிவிடலாம் என்ற முயற்சியின் போது தாத்தாவும் செத்துப் போய்விட சிக்கன் குரானா ரெஸிபியை கண்டு பிடித்தானா? ரெசிப்பிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருக்கும் போட்டிக் கடைக்காரனிடம் விற்றானா? அண்ணன் முறையில் இருப்பவனுக்கு பார்த்து நிச்சயம் செய்திருந்த சைல்ட்வுட் பெண்ணிடமான காதல் ஜெயித்ததா? என்பதை தியேட்டரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


கதையின் சுருக்கத்தைப்  படித்ததுமே புரிந்திருக்கும் இது எந்த மாதிரி ஜெனர் கதை என்று. ஓமியை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஆரம்பித்து இந்தியாவில் வந்து செட்டிலாகி, இருக்கிற கேரக்டர்களை எல்லாம் காட்டி முடிப்பதற்குள் கொஞ்சம் ஆயாசமாய்த்தான் இருக்கிறது. ஆனாலும் ரெண்டு சீனுக்கு ஒரு முறை எங்கேயாவது நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்கள். ஓமி ஊருக்கு வரும் அவசரத்தில் ஜட்டியை மறந்துவிட்டு வர, அந்த ஒரு ஜட்டியை வைத்து பேச ஆரம்பிக்கும்  மாமி குடும்ப உறுப்பினர்கள் அனைவரது உள்ளாடைகளை அலசப்படும் காட்சி போல ஆங்காங்கே நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்கள். 
ஓமியாய் குணால் கபூர். கொஞ்சம் அசமந்தத்தனமான ரியாக்‌ஷனோடுத்தான் படம் பூராவும் வருகிறார். இவருக்கு பதிலாய் திரையெங்கும் ஒரு உற்சாகத்தை தூவியபடி இருக்கிறார் கதாநாயகி ஹூமாகுரேஷி. பூசின உடலும், நேர் நாசியும், குவிந்த உதடுகளும் ம்ஹும். தூக்கத்தை கெடுக்கிறார். ஹீரோவின் மீதான காதலை நடு ராத்திரியில் வீட்டின் வாசலில் ஹீரோவே எதிர்பாராத தருணத்தில் அவசர அவசரமாய் முத்தமிட்டு விட்டு, வெட்கத்தில் தடுமாறி, வண்டியின் சாவி இல்லாமலேயே கிளம்ப முயற்சிக்கும் இடமும், நைட் மார்கெட்டில் மிளகாயின் சுவையை முகர்ந்து பார்த்தும், லேசாய் டேஸ்ட் செய்து பார்த்து செக் செய்யும் மாண்டேஜுகளிலும், குணால், ஹூமாவுக்குமிடையே ஏற்படும் காதல் வளரும் விதமும் படு க்யூட். கேங்ஸ் ஆப் வசேப்பூரில் மனதில் நுழைந்தவர் இப்படத்தில் ஆணித்தரமா சப்பளங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டார். 
புதிய இயக்குனர் சமீர் ஷர்மாவின் இயக்கத்தில் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பில் யுடிவி ஸ்பாட் பாய் வெளியிட்டிருக்கிறது. இயக்குனரின் முதல் படமிது. நிறைய கேரக்டர்களை அறிமுகப்படுத்தி செட்டிலாவதற்கு நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் செட்டிலான பிறகு அக்கேரக்டர்களினால் ஏற்படும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட சுவாரஸ்யமாகிவிடுகிறது. குறிப்பாக சொல்லப் போனால் பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கும் அண்ணனின் க்ளைமாக்ஸ் காட்சி. குடும்பமே லூசாக நினைத்து கொண்டிருக்கும் ஒரு கேரக்டர் க்ளைமாக்ஸில் எல்லோரும் தங்கள் மனதில் உள்ள உண்மையை சொல்லுமிடத்தில் தானே முன் வந்து நீங்க எல்லாம் உண்மை சொல்லும் போது நானும் சொல்றேன் நான் நீங்க நினைக்கிறா மாதிரி லூசுல்லை எனும் போது தியேட்டரே சிரிப்பு மழையில் நினைகிறது. குட்டிக் குட்டியாய் மாண்டேஜுகள் சிக்கன் குரானாவின் ரகசியத்தை அறிய உறவினர்களை சந்திக்கும் இடம், குட்டிக் குட்டியாக வரும் சுவாரஸ்யக் கேரக்டர்களின் அணிவகுப்பு எல்லாம் சுவாரஸ்யம். வசனங்கள் பூராவும் பஞ்சாபி ஆக்ஸெண்டில் இருப்பது முன் பின் வசனங்களை வைத்து புரிந்து கொள்வது கொஞ்சம் எனக்கு கஷ்டமாய் இருந்தது. இந்தியில் இம்மாதிரியான படங்களை தயாரித்து, அல்லது வாங்கி வெளியிடூம் யுடிவிக்கு தமிழில் மட்டும் பெரிய ஹீரோக்கள், இயக்குனர்களை வைத்து மொக்கைப் படங்களாய் தயாரித்து இம்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. சப்புக் கொட்ட வைக்கும்  சுவையான ஃபீல் குட் படம்.
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

Ponchandar said...

அச்சா பீல் குட் மூவி ஹை ! ! தேக்னெ கேலியெ லாயக் ஹை ! ! ஜரூர் தேக்லூங்கா ! !

மஞ்சுபாஷிணி said...

அருமையான விமர்சனம்பா.. கண்டிப்பாக பார்த்துவிடவேண்டும்...

அன்புநன்றிகள் பகிர்வுக்கு.

Deiva Subramanian said...

தலைப்பே கசபுசா என்றிருக்கிறதே என்று சந்தேகித்திருந்தேன். தெளிவாய் விமர்சித்திருக்கிறீர்கள், பார்த்துவிட வேண்டுமென்கிற ஆவல் அதிகமாகிறது, நன்றி.

Xavier said...

Me the First

துபாய் ராஜா said...

'கலகலப்பு' கதை வாடை அடிக்குதே தலைவரே...

ARAN said...

கேபிள்ஜி
சமீபத்தில் USTAAD HOTEL என்ற மலையாளம் மூவி பார்த்தேன் செம FEEL GOOD SKETCHED COLOURFUL MOVIE தவறாமல் பார்த்து விமர்சனம் செய்யவும்.படத்தின் மைய கருத்து நமது மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது. ஆனால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த MAKING என்று எண்ணுகிறேன். நன்றி