சாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.
சாலிகிராமத்தில் பிரசாத் லேப்புக்கு பக்கத்து ரோட்டின் வழியாய் வடபழனி நூறடி ரோடுக்கு போகிறவர்கள் எல்லோரும் அந்த ரோட்டின் முனைக்கு வரும் போது மோப்பம் பிடிக்க ஆர்மபித்துவிடுவார்கள். முக்கியமாய் அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு பூனை மீனின் வாசத்தை சரியாய் கண்டுபிடித்துவிடும் என்பதைப் போல சட்டென ஒரு கணம் நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்கள் இந்த ஏ.வி.கே வீட்டு சாப்பாட்டுக்கடையை.
மீன் சாப்பாடு என்பது இங்கே ஸ்பெஷல். ஷீலா, வஞ்சிரம் போன்ற மீன்களை சரியான காரம், மணம் கொண்ட மசாலாவோடு பொறித்து சாப்பாட்டோடு தருவார்கள். சாப்பாட்டில் மீன்குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம், எல்லாம் உண்டு.
மீன் குழம்பு கொஞ்சம் காரம் அதிகமாய் இருந்தாலும் நல்ல சுவையாய் இருந்தது. லேசான புளிப்போடு மீனின் வாசம் முட்டாமல். ரசம், சாம்பார் எல்லாம் அவ்வளவாய் சொல்லிக் கொள்ள முடியாது. ஓரளவு ஓகே லெவல் தான். ஆனால் இவர்கள் கொடுக்கும் மீன் இருக்கிறதே வாவ்.. அது அது அதுதான் நம்மை அங்கே கட்டிப் போட்டு வைக்கிறது. அவ்வளவு சுவை. சாதாரணமாய் பெரிய ஓட்டல்களில் கூட மீனை ஏற்கனவே போட்டு வைத்துவிட்டு, பிறகு சூடு செய்து தருவார்கள். ஆனால் இவர்களிடம் ஆர்ட்ர் செய்ய செய்ய பொரித்துக் கொண்டேயிருப்பார்கள். சுடச் சுட நல்ல மசாலாவில் ஊறிய மீனை தவாவில் போட்டு எடுத்து கொஞ்சம் எண்ணெய் அதிகமென்றாலும் ஒரு வாய் மீன் குழம்பு சாதத்தோடு, கிரிஸ்பியான ஒரு துண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.. வாவ்.. வாவ்.. நிஜமாகவே டிவைன் தான். சாப்பாடு மீன் எல்லாம் சேர்த்து சுமார் 150 ரூபாய் வந்துவிடும்.
உட்கார்ந்து சாப்பிட மொத்தமாய் பத்து பேருக்கு மேல் இடமில்லையாதலால் பெரும்பாலும் பார்சல் தான் போய்க் கொண்டிருக்கும். சாப்பாட்டில் மற்ற அயிட்டங்களின் சுவை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வயிற்றுக்கு வஞ்சனையும், கெடுதலும் பண்ணாத உணவு. உட்கார்ந்து சாப்பிட முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் மீனை மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க
கேபிள் சங்கர்
Comments
நல்ல ஓட்டல் அறிமுகம்... சென்னைவாசிகள் உடனே போங்கள்.... நாங்கள் வரும்போது கண்டிப்பாக போகிறோம்....