Thottal Thodarum

Mar 7, 2013

The Attacks Of 26/11


டைட்டிலைப் பார்க்கும் போதே படம் எதை பற்றி என்று சொல்லத் தேவையில்லை.  2008ல் இந்தியாவையே உலுக்கியெடுத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மும்பை அட்டாக்குகளைப் பற்றிய படம் தான் இது. ஆர்.ஜி.வி ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறார். 


ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியாவின் பார்வையில் சம்பவங்கள் சொல்லப்படுகிறது.  கராச்சியின் வழியாய் கடல் மார்கத்தில் வந்து நடுக்கடலில் குபேர் கப்பலை கடத்தி அதில் இருப்பவர்களை கொன்று விட்டு, அந்த கப்பலில் மும்பையில் உள்நுழைந்த பத்து தீவிரவாதிகள், தாஜ் ஓட்டல், லியோபோல்ட் க்ஃபே,  சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா ஆஸ்பிட்டல் ஆகிய இடங்களில் குழுக்குழுவாய் பிரிந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் குருவி சுடுகிறார்ப் போல சுட்டு, சுமார் 160 பேருக்கும் மேல் பலி வாங்கிய சம்பங்கள் எல்லாம் ஏற்கனவே செய்திகளில் பேப்பர்களில் படித்திருந்தாலும், நிஜமாய் நம் கண் முன் நிகழ்த்தி காட்டியிருக்கும் விதத்தை பார்த்தால் நம் ரத்தம் உறைகிறது. தாஜ் அட்டாக்கை அதிரடிப்படையினர் எதிர்தாக்குதல் நடத்தியதை தூரத்திலிருந்து டிவியில் பார்க்கும் போதே குலை நடுங்கியது.
ஜாயிண்ட் கமிஷனராக வரும் நானா படேகர் என்றொரு மகா நடிகன் இல்லையென்றால் படம் சோபித்திருக்கவே முடியாது. அப்படி ஒரு பர்பாமென்ஸ். ஆரம்ப கட்ட காட்சிகளில் கொஞ்சம் மெதுவாய் பேசி, ஒவ்வொரு சம்பவங்களுக்குமிடையே உணர்ச்சிவசப்பட்டு, தன்னையே கண்ட்ரோல் செய்து கொண்டு சொல்ல வேண்டியதை சொல்லியவர், இடைவேளைக்கு பிறகு ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள் அப்படி ஒர் ஆட்டம். கசாப்பை கைது செய்ததிலிருந்து, அவன் தூக்கிலப்படும் வரையிலான காட்சிகள் வரை மனுஷன் அதகளப்படுத்துகிறார். முக்கியமாய் கசாப் தான் செய்தது அல்லாவிற்காக, ஜிகாதிர்காக என்று தான் மூளை சலவை செய்யப்பட்டதை ஏதோ ஒர் உன்னதமான விஷயமாய் எக்ஸ்டஸியோடு சொல்லிக் கொண்டிருக்க, கேட்கும் நமக்கு வரும் கோபத்தில் ஒரு போடு போடலாமா? என்று நினைத்துக்  கொண்டிருக்கும் போது நானா மிகவும் பொருமையாய் அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போய் அவனின் சகாக்களின் பிணத்திற்கு முன் அவனைத் தள்ளி, ஜிஹாத் என்றால் என்ன? குரான் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?  குரானை படித்தவன் நிச்சயம் இந்த வழியை பின்பற்ற மாட்டான் என்றும் அதற்கான அர்த்தத்தையும் கூறி கசாப்பை அவன் இறந்து போன நண்பர்களின் சடலத்தின் மீது முகத்தை வைத்து அழுத்தி ‘வா.. மோந்து பார்.. அவன் உடம்பில் வாசனை அடிக்கிறதா? “ என்று பார் என்று பேசும் இடம் வாவ்..வாவ்..  

அதே போல் கசாப்பாக நடித்திருக்கும் சஞ்சீவ் ஜஸ்வாலின் நடிப்பும் அருமை. தான் செய்த காரியம் கடவுளுக்கானது, தான் சொர்கத்திற்கு போகும் வழி என்று புலம்பும் காட்சியில் மிகச் சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். 

வழக்கமான ஆர்.ஜி.வியின் கேமரா களியாட்டங்கள் ஏதுமில்லாமல் மிக அருமையான ஒளிப்பதிவு. குறிப்பாக சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் கசாப்பும் அவனது நண்பனும் ஆடும் வெறியாட்டக் காட்சிகள் கிட்டத்தட்ட தத்ரூபம். சில இடங்களில் படம் பார்க்கும் நம் மீது சுடும் படியான காட்சிகள் வரும் போது சிலிர்க்கிறது. பின்னணியிசை காட்சிகளை மீறி நம்மை ஆக்கிரமிக்காதது சிறப்பு. தாஜ் ஓட்டல் லாபி செட், லியோபோல்ட் கஃபே, ஸ்டேஷன் ஆகிய செட்களும் ஆர்ட் டைரக்‌ஷனும் அருமை.

நெடு நாளைக்கு பிறகு ஆர்.ஜி.வியின் இறுக்கமான இயக்கத்தில் ஒரு ஷார்ப் படம்.  ஆரம்பக் காட்சிகளில் வரும் லியோபோல்ட் கஃபே காட்சியில் ஆரம்பித்து, தாஜ் , சி.எஸ்.டி ஸ்டேஷன் மாயா ஆஸ்பிட்டலில் வரும் ஷூட் அவுட் காட்சிகள் அனைத்தும் ரத்தக் களறியாய் இருந்தாலும் அந்நிகழ்வுகளை காட்டாமல் இருந்தால் இந்த அளவிற்கான இம்பாக்ட் வந்திருக்காது. சி.எஸ்.டி ஸ்டேஷனில் போலீஸ் கான்ஸ்டபிள் மட்டும் உயிரோடு இருக்க, சுற்றிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து, குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்க, தன் உயர் அதிகாரியும் செத்துக் கிடப்பதைப் பார்த்து, பதறிப் போய் ஒர் லொடக்கு துப்பாக்கியை வைத்துக் கொண்டு அதை பற்றிய பயிற்சியின்மையை பாடி லேங்குவேஜில் காட்டி, பயத்தின் உச்சியில் கீழே வழிந்தோடும் ரத்ததின் மேல் கால் வைத்து வழுக்கி விழுந்து பதறி, பக்கத்தில் இருக்கு குற்றுயிரும் கொலையுருமான சிறுமியின் பயந்த அழுகைக்கு ஈடான பதட்ட அழுகையோடு கதறும் காட்சி ஆர்.ஜி.வியின் முத்திரை.
தாஜ் ஓட்டல் காட்சியில் கடைசியாய் அழும் கைக்குழந்தையை சுடும் காட்சியை காட்டாமலேயே சொல்லியிருந்தாலும் துக்கத்தில் நம் தொண்டையடைக்கிறது. எதற்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்ட ரத்தக்களறி நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதை காட்டாமல் இந்த விஷயத்தை இவ்வளவு அழுத்தமாய் நமக்கு கடத்தியிருக்க முடியாது என்றே படுகிறது. என்னதான் ஆளுக்காள் அவரைப் பற்றி சொல்ல விட்டுவிட்டார்கள், இவரை பற்றி சொல்லவில்லை, கமாண்டோ ப்டைகளின் அட்டாக்கைப் பற்றி ஏன் சொல்லவில்லை என்று மாறி மாறி கேள்விக் கேட்டால் அதற்கு பதில் ஒரே ப்டத்தில் அத்தனையும் எதிர்பார்க்காதீர்கள். ராம் கோபால் வர்மாவின் பெஸ்ட் படமா என்று கேட்டால் இல்லை என்று தான்  சொல்வேன் . ஆனால் சமீபத்திய பெஸ்ட் படம் என்றால் நிச்சயம் இது ஆர்.ஜி.வி மார்க் படம். டோண்ட் மிஸ்.
கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

எல் கே said...

சீக்கிரம் ஜீ டிவி போடுவான் பாத்துடலாம்

kk said...

நிச்சயம் படத்தைப்பார்த்துவிடுகிறேன் நஸனல் ஜியோக்கிரபியில் இத்தாக்குதல் தொடர்பாக ஒரு டொக்கியூமென்ரி படம் ஒன்றை போட்டிருந்தார்கள்..அதில் பல விடயங்கள் சொல்லியிருந்தார்கள் 6 மாதத்திற்குமுன்பாகவே இந்திய உளவு அமைப்பு தீவிரவாதிகள் கடல்வழியாக தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டிருந்தது அதோடு தீவிரவாதிகளிடம் ஹோட்டல் மப் இருந்தது அந்த ஹோட்டலைத்தவிர வேறு ஒரு இடத்தில் ஒரு தாக்குதலை நடத்துவதன் மூலம் போலீஸை திசைதிருப்புவதுமுக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது இவைகளுடன் ஹோட்டலுல் சம்பவத்தை நேரில் அனுபவித்தோரின் பேட்டிகள் போன்றவற்றாய் அது கொண்டிருந்தது லிங்க் அகப்பட்டால் கொமண்ட் செய்கின்றேன்

rajamelaiyur said...

விமர்சனங்கள் அனைத்தும் பசிட்டிவாகதான் வருகிறது .. பார்ப்போம்

ஆர்வா said...

என்ன ஒரு படம்... அப்படியே பிரமிக்க வெச்சிட்டாரு ராம்கோபால் வர்மா.. அதுவும் நானாபடேகருக்கும், கசாப்’கும் இடையே நடக்கும் கான்வர்சேஷன் வெரி வெரி சென்ஸிபிள்.. குரான் பத்தி சொல்லும் போதெல்லாம் பயந்துக்கிட்டே கைத்தட்டினேன்..எப்படி இந்தப்படத்தை எல்லாம் தடை பண்ணாம விட்டு வெச்சிருக்காங்க?

bandhu said...

முதலில் மகாராஷ்ட்ர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை வைத்து எடுப்பதாக இருந்தார் ஆர் ஜி வி. அதனால், அன்றைய முதல்வர் விலாஸ்ராவ் உடன் சம்பவம் நடந்த இரண்டாவது நாளே நேரில் சென்று படம் எடுப்பதற்காக இடத்தை பார்த்துவந்தது பெரும் கான்ட்ரவர்சி வந்தது. எவன் எப்படி போனால் என்ன. படம் எடுப்போமா. கல்லா கட்டுவோமா என்ற மனப்பான்மை தெரிந்தது. அதனால், படம் எப்படி இருந்தாலும் பார்க்க அருவெறுப்பாக இருக்கிறது.

Unknown said...

Neenga sonna Nane padekar scene, already Tamilae madhavan Thambi Padathulae pannittar.

saravanan selvam said...

உங்களது விமர்சனமும் படத்தின் பிளாட்டும் படம் பார்க்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது.

இரா.சி said...

// நிஜமாய் நம் கண் முன் நிகழ்த்தி காட்டியிருக்கும் விதத்தை பார்த்தால் நம் ரத்தம் உறைகிறது. //

படத்தை முதல் 40 நிமிடம் பார்த்துள்ளேன் அதற்குள் மேல குறிப்பிட்டுள்ளபடி எனக்கு நடந்துவிட்டது. கண்களில் என்றுமில்லாத அளவுக்கு பயமும் கண்ணீரும் வந்தது. அந்த குழவந்தையின் அழுக்கை நின்றவுடன் என் இதயம் வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எப்போதும் துப்பாக்கி வெடிக்கும் பல ஆங்கில படங்களை பார்த்த எனக்கு இந்த படத்தை இதற்க்கு மேல் பார்க்கும் மன துனிவில்லை. :(