Thottal Thodarum

Mar 26, 2013

அடுக்குகளிலிருந்து - அமுதன்

அமுதனைக் கண்டால் என் ஆபீசில் வேலை செய்யும் பெண்ணைத் தவிர யாருக்கும் பயமே வராது.  அவள் கூட ஒரு கட்டத்தில் அவனைப் பார்த்தால் உட்கார்ந்த மாத்திரத்தில் போ..போ என்று சைகையாய் சொன்னதும் ஏதும் பேசாமல் போய்விடுவான். ஆனால் தினமும் காலையில் எழுந்ததும் என் ஆபீசின் வாசலில் வந்து அரை மணி நேரம் நிற்காமல் போக மாட்டான்.  அமுதன் எதிர்வீட்டு ராகவாச்சாரியின்  மகன். மூத்ததாய் ஒர் பெண்.  ஊருக்கெல்லாம் ஜாதகம் பார்க்கும் அவருக்கு கட்டம் சரியில்லை என்றே சொல்ல வேண்டும்.  மகளின் வாழ்க்கையும் சரியாய் அமையவில்லை. மகன் அமுதன் மனநிலை சரியில்லாதவன். ஆனால் இக்கவலைகள் எதையும்  காட்டாமல் ராகவாச்சாரி சந்தோஷமாய் காலையில் நேற்று நடந்த கிரிக்கெட் மேட்ச் பற்றிய காலத்தை படித்துவிட்டு, மீண்டும் ரீடெலிகாஸ்டை பார்ப்பார். மீண்டும் சாயங்காலம் வந்து விவாதிப்பார். ராகவாசாரியின் பெண் அப்படியே அம்மா அப்பாவின் கலந்தடிக்கப்பட்ட ஜெராக்ஸ். அமுதனிடன் ராகவாச்சாரியின் தடம் கூட தெரியாது.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அமுதன் யாரையும் தொந்தரவு செய்தவனில்லை. பேச்சு வராது. எல்லாமே செய்கையில்தான் எப்போதாவது ஒரு முறை  “டீ” “காபி” என்று சொல்லி கேட்டிருக்கிறேன்.அதுவும் தெளிவாய் இருக்காது. தினமும் காலையில் எழுந்து வேட்டி கட்டிக் கொண்டு, சட்டையை தாறுமாறாக பட்டன் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எதிரே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வாசலில் போய் நின்று கொண்டேயிருப்பான். பின்பு ஏதாவது தோன்றினால் அங்கிருந்து நகர்ந்து அங்கேயிருக்கும் பிள்ளையார் சந்நிதியின் வாசலில் போய் உட்கார்ந்து கொள்வான்.  அவனை பற்றித் தெரிந்தவர்கள் அவனை பார்த்து “என்னடா அமுதா எப்படியிருக்கே? என்று குசலம் விசாரித்தவர்களைப் பார்த்தால் அவனுக்கு வெட்கம் வந்துவிடும். அவன் வெட்கப்படுவதை பார்கவே நிறைய பேர் விசாரிப்பார்கள். அவன் யாரிடம் எதும் கேட்கமாட்டான். சரியாய் சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்கு போய்விடுவான். மீண்டும் தூங்கி முழித்து கோயில், என் ஆபீஸ் வாசல் .  என்னை பார்த்தால் மட்டும் “டீ” என்பான். பக்கத்து கடையில் டீ சொல்லிவிட்டு போய்விடுவேன். நான் ஆபீஸினுள் வரும் போதே வாசலில் உள்ள கேபிள் டிவி ஒயர்கள் போகும் போஸ்டின் மீதுதான் சாய்ந்திருப்பான். எப்போது அவன் அதை பிடித்துக் கொண்டு தான் நிற்பான். பார்வையில் ஒருவிதமான ஒளியிருக்கும். பளபளவென இருக்கு. வாரத்திற்கு ஒரு முறை பக்கத்து கடையில் கூட்டம் இல்லாத நேரத்தில் அவனே போய்.. “ஷே..ஷே.. “ என்ரு சொல்லி சேவிங் செய்து கொண்டுவிடுவான்.

நான் அடிக்கடி அவரின் வீட்டிற்கு போவேன். மாமாவும் மாமியும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசியே பார்த்ததில்லை. ராகவாச்சாரியின் குரல் மட்டுமே அந்த வீட்டில் கேட்டிருக்கிறேன். மாமியின் முகத்தில் ஒருவிதமான மென்சோகமும், லேசான புன்னகையும் இருக்கும். வீட்டில் என்னைப் பார்த்தால் அமுதன் “டீ..டீ” என்பான். “இருடா கொடுக்கச் சொல்றேன் என்று ராகவாச்சாரி  பொதுவாய் சொன்ன மாத்திரத்தில் மாமி சமையல் அறையிலிருது டீ யோ காப்பியோ ஏதோ ஒரு டம்ப்ளரோடு வந்துவிடுவாள். இவன் பொறந்த்திலேர்ந்தே இப்படித்தானா சார்? இல்லை நடுவுல ஏதாச்சும் ப்ராப்ளமா? டாக்டர் கிட்ட காட்டலையா? என்று ராகவாச்சாரியிடம் கேட்ட போது.. ‘அவன் அவதாரம்டா..ஏதோ ஒரு சேதி சொல்லத்தான் பொறந்திருக்கான். யாருக்குன்னுதான் புரியல. ஆனா சொல்ற அன்னைக்கு ஏதாவது ஒரு விஷயம் க்ளியர் ஆயிரும் பாரு.” என்பார். அச்சமயங்களில் அவருக்கும் அமுதனுக்கும் வித்யாசம் இல்லையோ என்று தோன்றும். அவர் அப்படி சொன்னதிலிருந்து யாரிடமும் ஏதும் கேட்டு வாங்கத அமுதன் என்னிடம் மட்டும் டீ கேட்டு வாங்குவதில் ஏதோ கடவுளின் செய்தி இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

அமுதனுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் தினங்கள் என்று பார்த்தால் ஆஞ்சநேயர் கோவில் விழாக்களூம், பக்கத்து இருக்கும் முப்பாத்தம்மன் கோயில் விழா காலங்களில் மட்டும் தான். விழா நாட்களில் மட்டும் நடு ராத்திரி வரை நடக்கும் மேடை கச்சேரி, நாடகங்கள் அனைத்தையும் கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பான். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் போகும் வரை உட்கார்ந்திருப்பான். அதற்கு முன் அவனை அங்கிருந்து கூட்டிப் போக நினைத்தால் கோபம் வந்து ஓரமாய் உட்கார்ந்தபடி பெரும் குரலோடு அழ ஆரம்பித்துவிடுவான். அந்த அழுகை பாக்டரி சங்கின் ஒலியை விட அதிகமாய் இருக்கும். எல்லோரும் ஒரு கணம் சட்டென அவர்கள் செய்யும் காரியங்களை நிறுத்திவிட்டு பார்க்க வைத்துவிடும் குரல். அவன் மிகவும் விரும்பும் அம்மன் கோயில் திருவிழாவின் கடைசி நாளன்று என் ஆபீஸின் வாசலில் அமுதன் இறந்து போனான்.

கோயில் திருவிழாவிற்கு திருட்டு மின்சார இணைப்பு எடுத்தவர்கள் என் ஆபீஸ் வாசலில் உள்ள கேபிள் டிவி போஸ்டின் மீது ஒயரை சுற்றி எடுத்துப் போய் தெரு முனையில் இருந்த அம்மன் சீரியல் லைட் கட்டவுட்டுக்கு ஒளியேற்றியிருந்தார்கள். போடும் போதே சொன்னேன். ஒரு கம்ப வச்சி போடுங்க என்று சொல்லச் சொல்ல கேட்காமல் போட்டார்கள். காலையில் வழக்கம் போல டீ கடைக்கு வந்து நின்று போஸ்டின் மீது கை வைத்து நின்ற மாத்திரத்தில் “ஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று பெருங்குரலெத்து கத்தியபடி தூக்கி வீசப்பட்டிருக்கிறான். உடனடியாய் லோக்கல் கவுன்சிலர் முதல் அல்லக்கைகள் வரை  ப்ரெஷர் கொடுத்து ”விடுங்க சாமி.. ஆத்தா உங்களுக்கு நல்லது தான் பண்ணியிருக்கா. ஆயிரம் இருந்தாலும் புள்ளை புள்ளைதான் இல்லேங்குல. நடந்தது நடந்து போச்சு.. அமுதனை இப்படி சாகக் கொடுக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு ஆனா இவனுக்காக பிரச்சனைப் பண்ணி என்ன ஆவப் போவுது. இவனை ஜாம்..ஜாம்னு அனுப்பி வைப்போம். ஒரு வேளை ஆத்தா இவனை கூட்டிக்கிறதுக்காகவே இப்படி ஒரு விஷயத்தை பண்ணியிருகாளோ என்னவோ?” என்று அவனது சாவை சாதாரண சாவாக்கி மேட்டரை அமுக்கி விட்டார்கள். நான் வேணும்னா மேலிடத்துல பேசட்டுமா சார்? என்று ராகவாச்சாரியிடம் கேட்ட போது “ எதுக்கு..வேண்டாம். அவன் லோகத்துக்கு ஏதோ சொல்ல வந்திருக்கான்னு சொல்லிண்டேயிருப்பேன் இல்லை. அத அவன் சாகறச்சே சொல்லிட்டுத்தான் போனான். என்று நிறுத்தியவரின் முகத்தைப் பார்த்தேன். “என்னை பார்த்து அப்பான்னு சொனனான்” என்றபடி “ஓ” வென அழ ஆரம்பித்தவரின் அழுகுரல் அமுதனின் அழுகுரல் போலவே இருந்தது. மாமி அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த சோகம் இப்போது இல்லை.
கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

srinits78 said...

super

srinits78 said...

நல்லா இருக்கு

நாடோடிப் பையன் said...

Wonderfully crafted touching short story.

Unknown said...

Very nice. Something similar to Thalaivar Sujatha's touch..

Anonymous said...

ஒரு உயிரோட்டமான நிகழ்வை அருமையான சிறுகதையாக மாற்றி இருக்கீறீர்கள்.. உங்கள் மொழிநடைக்காக உங்களை வாழ்த்துவதா.. இல்லை அமுதனின் பிரிவுக்காக வருத்தம் தெரிவிப்பதா என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறேன்...

சமுத்ரா said...

நல்லா இருக்கு

விஸ்வநாத் said...

//தலைவர் சுஜாதா'ஸ் டச் //
இப்புடி சொல்லி சொல்லியே ஒடம்ப ரணகளமாக்குறாங்கப்பா

Kalyankumar said...

இதேப் போல் எங்கள் ஊரில் அழகப்பன்,காமு அவர்களின் நினைவு வந்தது ,,

Unknown said...

Except amuthan if somebody died means?

குரங்குபெடல் said...

நெகிழ்வான பதிவு . . .