சினிமா தியேட்டர்களுக்கு பெண்களின் வரத்து குறைந்த காரணம் டிவி சீரியல் என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. பெண்களுக்கு விருப்பமான கதைகள் தொலைக்காட்சியிலேயே வருவதால் சினிமாவிற்கு போவது குறையத்தான் செய்தது. திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வந்த காலமெல்லாம் கூட உண்டு. அப்ப இப்போதெல்லாம் சீரியல்கள் லாபமில்லையா? என்று கேட்டீர்களானால் இல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன? என்று கேட்கிறீர்களா? அங்கே தான் ப்ரச்சனையே ஆரம்பம்.
இன்றளவில் தமிழ் சீரியல்களின் மகாராஜா என்றால் அது சன் டிவிதான். என்னதான் இப்போது போட்டிக்கு நிறைய சேனல்கள் வந்திருந்தாலும், அதனுடய ஜி.ஆர்.பி குறைந்திருந்தாலும் தமிழ் சீரியல்களில் அதிகப் பட்ச டி.ஆர்.பியை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் நம்பர் ஒன் சன். சன்னில் ஸ்லாட் கிடைப்பது என்பது அப்படியொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு அரை மணிநேரத்தையும் விலைக்கு வாங்கித்தான் சீரியல் தயாரிக்க வேண்டும், பின்பு அதை மார்கெட் செய்ய வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.இவர்களின் சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவி சீரியல்கள் சிலதைத் தவிர, வேறெந்த சேனலில் சீரியல் போட்டாலும் செல்ப் எடுக்காமல் போனதால் என்ன செய்வது என்று முழி பிதுங்கிக் கொண்டிருந்தனர் சேனல் வட்டாரம். குறைந்தபட்சம் ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரமாவது செலவு செய்தால் தான் ஓரளவுக்கு குவாலிட்டியான சீரியலை செய்ய முடியும். ஆனால் செலவு செய்யும் காசுக்கு சேனலே வெளியாருக்கு பணம் கொடுத்து தயாரித்து வாங்கிய சீரியல்களை சன்னின் சீரியலுக்கு போட்டியாய் மார்கெட் செய்ய முடியாமல் அரைகுறையாய் முடித்துவிட வேண்டிய கட்டாயம் எல்லாம் சிறு சேனல்களுக்கும் வர ஆரம்பித்தது. மாலை நேரத்தில் மக்களுக்கு சீரியல் தான் பெரும் டி.ஆர்.பி எனும் பட்சத்தில் சீரியல் போடாமல் இருந்தால் கிடைக்கிற டி.ஆர்.பியும் போய் விடும் அபாயம் இருப்பதால் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். யோசித்தனர் சிறு சேனல் தயாரிப்பாளர்கள். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற தாரக மந்திரத்தை வைத்து அவர்கள் செய்த ஐடியாத்தான் டப்பிங் சீரியல்கள். தெலுங்கிலிருந்து தமிழில் ஆரம்பித்தார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் மலையாள ஐய்யப்ப சீரியல்கள் மாலை நேர டி.ஆர்பியை பிடிக்க, ஏன் நாம் ஹிந்தி சீரியல்களை விலைக்கு வாங்கி டப் செய்து ஒளிபரப்பக்கூடாது என்று யோசனையில் கலர்ஸ் போன்ற சேனல்களில் வெளியாகி ஹிட்டத்துக் கொண்டிருக்கும் சீரியல்களை சல்லீசான விலையில் வாங்கி டப்பிங் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். உதாரணமாய் ராஜ் டிவியில் சிந்து பைரவி என்கிற ஹிந்தி டப்பிங் சீரியல் மாலை நேர ப்ரைம் டைமில் நல்ல ரேட்டிங்கைப் பெற மற்ற சேனல்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்தது.
பாலிமர், ஜீதமிழ், போன்ற சேனல்களுக்கு இப்போது நல்ல டி.ஆர்.பி தருவது இந்தி டப்பிங் சீரியல்களே. நல்ல ரிச்சான அட்மாஸ்பியர். பெரிய பட்ஜெட், அழகழகான நடிகைகள். நல்ல குவாலிட்டியான மேக்கிங் எல்லாம் ப்ளான் செய்தால் கூட நம் தமிழ் மொழியில் இந்த தரத்தை, பட்ஜெட்டை கொடுக்க முடியாது என்பதினால் சேனல்கள் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிப்பதற்கு பதிலாய் டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் பச்சைக் கொடியை காட்ட ஆரம்பித்தார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகியது.
சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அத்துனை சேனல்களிலும் ரெண்டு டெய்லி சீரியலாவது தயாரித்துக் கொண்டிருக்க, நடிக்க ஆர்வமாயிருக்கும் நடிக, நடிகைகள், எழுத்தாளர்கள், டெக்னீஷியன்கள், இயக்குனர்களுக்கு எல்லாம் அவர்களின் கனவு நினைவாகும் வாய்ப்பாக அமைந்திருந்தது.ஆனால் இந்த டப்பிங் சீரியல்களின் வரவால் இவர்களுக்கான வேலை வாய்ப்பு போனது. மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த சிறு சிறு கேரக்டர்கள் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் வறுமை நிலைக்கு சென்று விட்டார்கள். அங்கே இங்கே கஷ்டப்பட்டு எடிட் சூட் போட்டு ரெண்டு சீரியல் கையில் இருந்தால் பொழைச்சுக்கலாம் என்ற தொழில் நடத்திக் கொண்டிருந்த எடிட் சூட்டெல்லாம் இழுத்து மூடப்பட்டது. இப்படி தமிழ் டிவி சீரியல் உலகமே கிட்டத்தட்ட சன் / விஜய் டிவி சீரியல்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆட்டத்தை மூடிவிட,நூற்றுக் கணக்கில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சீரியல்கள் இன்றைக்கு மொத்தமாய் முப்பது நிகழ்ச்சிகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தால் அதிசயம்தான். அதிலும் தற்போதைய ரியாலிட்டி ஷோக்களில் இன்வெஸ்ட் செய்தால் சீரியலை விட லாபம் அதிகமாகவும், இரண்டு சீரியல்கள் போடும் நேரத்தில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்று போட்டால் டி.ஆர்.பிக்கு டி.ஆர்பியும் ஆச்சு. செலவும் குறைத்தாகிவிட்டது என்று நினைக்க ஆரம்பித்தது சீரியல் உலகம்.
சீரியல் தயாரிப்பு என்பது ஒரு கட்டத்தில் குடிசை தொழில் போன்ற நிலையில் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல்கள் எல்லாம் சன்னின் சீரியல் டி.ஆர்.பியோடு போட்டி போட முடியாமல் பட்ஜெட்டை குறைக்க ஆரம்பிக்க,கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சீரியல்களின் தரமும் குறைய ஆர்மபித்தது. அதனால் பார்வையாளர்கள் குறைய ஆரமபித்தார்கள்.சேனல்காரர்கள் டப்பிங் சீரியல்களுக்கு போனதால் வேலை வாய்ப்பில்லாம இருக்கும் சீரியல் உலகம் கொஞ்சம் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது சில வருடங்களுக்கு முன். ஆனால் சரியாய் யாரும் முன்நின்று நிற்காமல் போகவே சொதப்பலாயிற்று. ஆனால் இதே போன்ற பெரும் பாதிப்பை தெலுங்கு சீரியல் உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அங்கேயும் சீரியல்களின் தாதாவாக சன்னின் ஜெமினி டிவியிருக்க, அவ்ர்கள் கூட ஒன்றிரண்டு டப்பிங் சீரியல்களூக்கு மாறியிருக்க, ஈடிவி, மாடிவி, ஜீ தமிழ் போன்ற பிரபல சேனல்கள் டப்பிங் சீரியல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, இதை எதிர்த்து விஜய் யாதவ் என்கிற சீரியல் நடிகர் சேனல்களுக்கு எதிராய் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர இருக்கிறார்.
இந்த உண்ணாவிரத அறிப்பைத் தொடர்ந்து ஜெமினியும், ஈடிவியும், தங்கள் டப்பிங் சீரியல் ஒளிபரப்பை ஏப்ரல் 14 முதல் நிறுத்திக் கொள்வதாய் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் அட பரவாயில்லையே என்று தோன்றினாலும் இதனுள் ஒர் உள்குத்து இருப்பதாகவே படுகிறது. தமிழில் சமீபகாலமாய் பாலிமர் சேனலில் ரெண்டு ஹிந்தி டப்பிங் சீரியல்கள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதை என்ன செய்வது என்று யோசித்த சன் தன் கைவரிசையை தன்னுடய எஸ்.சி.வி நெட்வொர்க்கில் அச்சேனலை கட் செய்து திருப்திப் படுத்திக் கொண்டது. அதே போலத்தான் அங்கேயும் காசு செலவு செய்து இவர்கள் தயாரிக்கும் சீரியல்களை விட டப்பிங் சீரியல் மூலமாய் குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற்றுக் கொண்டிருக்கும் சேனல்களை வீழ்த்த இது ஒர் பெரிய ஆயுதம் என்று கூட இவர்கள் இதற்கு ஆதரவு கொடுத்திருக்கக் கூடும்.
ஒரு பக்கம் வியாபாரரீதியாய் லாபம் தான் ஒர் தொழிலுக்கு ஆதாரம் என்றாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் யோசிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. நம் மண்ணின் கதைகளை, திறமைகளை வெளிக் கொணர வாய்ப்பேயில்லாம போய்விடக்கூடிய அபாயம்தான் அது. ஹிந்தியில் நம் பட்ஜெட் சீரியல்களை டப்பிங்கில் வெளியிட முடியாது. அதற்கு அங்கே வியாபார வாய்ப்பேயில்லை. அதே போல மலையாளத்தில் தமிழ் சீரியல்களை டப் செய்து வெளியிட்டால் கலாச்சார ரீதியாகவே செட்டாகாது என்பதால் அதுவும் வேலைக்காகவில்லை. கன்னடத்தில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாய் டப்பிங் சீரியல்களுக்கு அனுமதி கிடையாது. நேரடியாய்த்தான் எடுத்து ஆக வேண்டும். அப்படியிருக்க, அங்கே எல்லா சேனல்களும் நேரடி கன்னட சீரியல் தயாரிப்பில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது ஏன் தெலுங்கில் முடியாது என்ற கேள்விதான் இந்த போராட்டத்திற்கு ஆரம்பம். நிச்சயம் இப்போராட்டம் வலுப்பெற்றால் தெலுங்கு டிவி உலகில் பெரும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதே போன்ற பாதிப்பினால் நலிந்து வரும் தமிழ் சீரியல் தயாரிப்பாளர்கள் டெக்னீஷியன்கள், நடிக,நடிகர்கள் ஏன் இந்த போராட்டைத்தை இங்கேயும் தொடர்க்கூடாது?
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Good joke... All the serials are "ahuvachi" and crappy.. ithula mannin kathaigal-a eththana serial vanthirukku..
அடப்பாவமே இந்த சீரியல பார்த்து கண்ட கன்றாவி எல்லாம் நம் மண்ணின் கதையாகிப்போச்சே என்னக் கொடுமை சரவணன்.
பிரமாதமான கட்டுரை, கொஞ்சம் quotes சேர்த்து நறுக்கென்று எடிட்டினால் ஏதேனும் வெகுஜன இதழில் கவர்ஸ்டோரியாக வெளியிடக்கூடிய அளவுக்கு value கொண்ட content "
இதழியல் பிதாமகன் . . .
இரண்டாம் சுஜாதா . . .
போன்ற பட்டங்கள் பெற்றவரே பாரட்டிட்டாரு
அப்புறம் என்ன . . .
//அழுது வடியும் சீரியல்களில் இருந்து விடுதலை கிடைக்கட்டும்....//