அருந்ததியில் ஆரம்பித்து மகதீராவில் சூடுபிடித்து இப்போது தமருகமில் வந்து நின்றிருக்கிறது. மாய மந்திரம், சாமி, பூஜை, பக்தி, போன ஜென்மம், கெட்ட சக்திகள், நல்ல சக்திகள் இவைகளுக்குள் நடக்கும் போராட்டம் போன்ற கதையம்சம் உள்ள படங்களின் வெற்றி கொடுத்த தைரியம். அந்த தைரியத்தில் தான் இந்த தமருகம்.
அந்தகாசூரன் அசுர வம்சத்தில் மிச்சமிருக்கும் ஒரே ஒருவன். உலகையே அடக்கி ஆள ஆசைப்படும் அவன் அதற்காக கடும் தவம் மேற்க் கொள்கிறான். தன் ஆசையை அடையை எல்லா கிரங்களும் ஒன்று சேரும் நாளில் அனுஷ்கா பிறக்கிறார். சிவ பார்வதி தம்பதியரின் அருளோடு, நாகார்ஜுன் பிறக்க, அந்தகாசூரனுக்கு நாகார்ஜுனால் எதிர்காலத்தில் ப்ரச்சனை வரும் என்று தெரிய வருகிறது. அதனால் அவரின் குடும்பத்தையே அழிக்க நினைத்து ஒரு விபத்தை ஏற்படுத்த, அதில் நாகார்ஜுன் குடும்ப பெரியவர்கள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். சிவபக்த குடும்பமான தன் குடும்பத்தை காப்பாற்றாத சிவனை வெறுக்க ஆரம்பிக்கிறார் நாகார்ஜுன். இப்போது அனுஷ்காவுக்கு திருமண வயது வர, மேலும் தீவிர தவம் மேற்கொண்டு அனுஷ்காவை திருமணம் செய்யும் வரத்தை பெற்று விடுகிறான் அசுரன்.
அந்த திருமணம் நடந்தால் அசுரனின் கையில் ஐந்து கிரங்களும் கட்டுக்குள் வந்துவிடும் என்பதால் அந்த பெண் உயிரோடு இருந்தால் தானே என்று அனுஷ்காவை அழிக்க அகோரிகள் கிளம்பி வருகிறார்கள். சிவன் மனித ரூபம் எடுத்து நாகார்ஜுனை வழிநடத்த, அனுஷ்காவை கொல்ல வரும் அகோரிகளிடமிருந்தும் அந்தகாசூரனிடமிருந்து எப்படி நாகார்ஜுனா காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
நாகார்ஜுனுக்கு வயதே ஆகாதா? அவர் மகன் நாக சைதன்யாவை விட படு இளைமையாய் இருக்கிறார். தியேட்டரில் படம் பார்க்கும் இளம் பெண்கள் அறிமுகக் காட்சியில் பார்த்து “ஊ” என்று ஊளையிடும் அளவிற்கு கவர்ச்சியாய் இருக்கிறார். சண்டையிடுகிறார். பஞ்ச் டையலாக் பேசுகிறார். க்யூட்டாக காதலிக்கிறார். அனுஷ்கா பார்க்க அழகாய் இருக்கிறார். முகத்தில் கொஞ்சம் வயது தெரிய ஆர்மபித்திருக்கிறது. குளத்தில் குளிக்கும் காட்சியில் பிரம்மாண்ட கவர்சியில் நம்மை மூச்சடைக்க வைக்கிறார்.
அசுர குலமாய் வரும் “பொம்மாயி” குரல் புகழ் ரவிசங்கரின் குரலும், பாடி லேங்குவேஜும் சரியாய் சூட்டாகியிருக்கிறது. பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா, கிருஷ்ண பகவான், ஆகியோரின் காமெடி அங்காங்கே கிச்சு கிச்சு மூட்டினாலும், பல இடங்களில் இவர்களது ட்ராக் ட்ராகிங். சிவனாக வரும் ப்ரகாஷ்ராஜின் முகத்தில் தெரியும் அபரிமிதமான அமைதி பல இடங்களில் மனதினுள் ஒரு ப்ரெஷ்னெஸை உணர வைக்கிறது. நிஜமாகவே சிவன் வந்தால் இப்படி இருப்பாரோ என்று நினைக்க தோன்றுமளவுக்கு.
வழக்கம் போல் சோட்டா.கே.நாயுடுவின் ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. சிஜிக்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். பல காட்சிகள் நன்றாகவே இருந்தது. க்ளைமாக்ஸ் மட்டும் காட் ஆப் வார் கேமில் வரும் கேரக்டர்கள் போலவும், அதன் அட்மாஸ்பியரை களமாய் வைத்து செய்திருப்பது ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 50வது படமாம். சாய் பாடலைத் தவிர பெரிதாய் ஏதும் நினைவில் இல்லை. அதுவும் அந்தப் பாடலில் ஒரு காலத்தில் கவர்ச்சியாய் இருந்த ஷார்மி, தொளதொளத்துப் போய் ஆடிய ஆட்டத்தினால் கொஞ்சம் கவனிக்கப்பட்ட விஷயமாய் போய்விட்டது.
எழுதி இயக்கியவர் சீனிவாச ரெட்டி. கதையாய் பார்த்தால் சுவாரஸ்யமான லைன் தான். ஆனால் அதை திரைக்கதையாக்கி சொல்லும் போது ஹீரோ, வில்லனுக்குமிடையே ஆனா போராட்டம் போகப் போக படு மொக்கையாய் இருப்பதால் சுவாரஸ்யம் இழக்க நேர்ந்து அட சீக்கிரம் முடிங்கப்பா என்று சொல்லுமளவுக்கு ஆகிவிடுகிறது. கணேஷ் வெங்கட்ராமனின் உடலில் அசுரம் போய் ஏதாவது செய்வான் என்று நிமிர்ந்து உட்காரும் போது படு மொக்கையான ஐடியாக்களை அவர் செயல்படுத்த எழுந்து உட்கார்ந்த நாம் சரிந்து படுத்துவிடுகிறோம். க்ளைமாக்ஸ் அகோரி நடன சிவன் பாட்டெல்லாம் உச்சபட்ட கொடுமை.
கேபிள் சங்கர்
Comments
நாகார்ஜுனா எப்படி இளமையா வெச்சிருக்காருன்னு தெரியலையே! அமலா கிட்ட கேட்டா விடை தெரிய வாய்ப்புண்டு. :)
ஆந்திராவில்தான் இந்த மேஜிக்கல் ரியலியம் நல்லா எடுபடுது. தமிழ்ல ஒழுங்கா எடுக்க ஆளில்லை. திரும்பத் திரும்ப வில்லன் - ஹீரோ ஒன்லைனர் கடுப்படிக்குது. எங்கேயும் எப்போதும், வாகைசூடவா, பீட்சான்னு அப்பப்போ நல்ல படங்கள் வந்து காப்பாத்துது.
உங்க விமர்சனம் படிக்கிறப்பவே படம் எப்படியிருக்குன்னு புரிஞ்சு போச்சு. தப்பிச்சோம் சாமி.
சிங்கம்-2ல அனுஷ்கா நடிக்கிறாங்களாம். பாப்போம் எப்படியிருக்குன்னு.