தமிழகத்தின் பிரபலமான தொடர் ஓட்டலின் ஃபாஸ்ட் புட்டில் பதினான்கு இட்லியும், ஒரு செட் பூரியும் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வெளியே ஆக்ரோஷமாய் மழை பெய்து கொண்டிருந்த்து. மழைக்கு சூடான இட்லியை சாம்பாரில் முக்கி அதில் இரண்டு கரண்டி நெய் மிதக்க, இட்லியை ஸ்பூனால் உதிர்த்து, சாமபாரும் நெய்யும் கலந்து பேஸ்டாக ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டது மழைக்கு தேவாமிர்தமாய் இருந்தது. கடை மூடும் ராத்திரி நேரத்திலும் ஐம்பது பேர் நின்றிருந்தார்கள். சுவாரஸ்யமாய் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்த போது, ஷேவ் செய்யாத தாடியுடன், கொஞ்சம் அலங்கோலமாய், லுங்கி சட்டையுடன் அழுக்காய் ஒருவன் நின்றிருந்தான். அருகிலும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் அவன் நின்றிருந்த்தில் ஒரு ஜாக்கிரதைத்தனம் இருந்தது.
“என்ன?” என்றேன் முகத்தை கடுப்பாய் வைத்தபடி.
“சார்..சாப்பிட்டு நாளாச்சு ஏதாவது டிபன் வாங்கி தர்றீங்களா?” என்றதும் எனக்கு ஜிவ்வென கோவம் ஏறியது. என்ன கொடுமையிது ஹோட்டலுக்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டலுக்குள்ளும் வந்து பிச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார்களே...
“என்னங்க இது வெளிய போங்க.. நிம்மதியா சாப்பிடவிடுங்க..” என்று சொல்லிவிட்டு அருகில் யாராவது சூப்பர்வைசர் இருக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்து ஒருவரை கண்டு கையைசைத்து வர சொல்லிவிட்டு திரும்பிய போது அவன் இல்லை. கடையின் வாசலில் நின்றிருந்தான். நான் அவனைப் பார்த்ததை பார்க்காத்து போல நின்றிருந்தான். நான் அவனை மறந்து சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சாப்பிட்டு வந்து வெளியில் மசாலா பால் சாப்பிட பில்லைக் கொடுத்துவிட்டு நின்றிருந்த போது, கடைக்குள் பார்த்தால் மீண்டும் அவன் அதே இடத்தில் மையமாய் பார்த்தபடி நின்றிருந்தான்.
எடுப்பது பிச்சை அதை ஏன் இம்மாதிரி உயர்தர ஹோட்டலில் எடுக்க வேண்டும்?. வேறு எங்காவது கையேந்தி பவனில் நின்று கேட்கலாமல்லவா? பிச்சையிலும் உயர்ந்த பிச்சை போலிருக்கிறது. உடம்பு நன்றாகத்தானே இருக்கு. வேலை செஞ்சி பொழச்சா என்ன? என்று அவன் மேல் கோபம் வந்தது. சூடான மசாலாப் பாலைப் சாப்பிட்டபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அங்கேயே நின்றிருந்தான். மெல்ல மசாலாப் பால்காரனைக் கூப்பிட்டு,
“தம்பி.. அதோ நிக்கிறான் பாரு ஒரு ஆளு.. அவனை முதல்ல வெளிய அனுப்பு” என்றேன்.
“ஏன் சார்..?”
“சாப்பிடும்போது பக்கத்தில வந்து பிச்சைக் கேட்குறான். இந்த மாதிரி ஆளுங்க. வந்து நின்னு பிச்சை கேட்டா.. உங்க ஓட்டல் பேருதான் கெட்டுப் போகும்”
பால்காரன் ஏதோ முடிவெடுத்தவனாய் திரிசமனாய் என்னைத்தாண்டி, வண்டி பார்க்கிங்கில் நின்றிருந்த நேபாளியை பார்க்க, அவன் அருகில் வந்தான். தமிழும் இல்லாமல், ஹிந்தியும் இல்லாமல் “உஸ்கோ.. பாரு..” என்றான். உள்ளிருந்தவனை கைக்காட்டி. நேபாளி, தன் பெருத்த உடம்பை பதட்டமில்லாமல் அசைத்தபடி, மெல்ல அவனைக் கிராஸ் செய்து, உள்ளே கவுண்டர் வரை போய் நின்று, அங்கிருந்து அவனைப் பார்த்த படி, திருமப் கேஷுவலாய் நடந்து வந்து, அவனருகில் வந்து “என்ன? “ என்பது போல பார்க்க, அழுக்கன் சிறிதும் பதட்டப்படாமல், உள்பக்கமாய் கைக்காட்டி வாங்க போயிருக்கிறார்கள் என்பது போல் ஏதோ சொல்ல.. நேபாளி மீண்டும் அதே ஸ்பீடில் ஆடி அசைந்துக் கொண்டு வந்து பால்காரனிடம் உதட்டைப் பிதுக்கினான்.
“இல்லீங்க என் கிட்ட வந்து அவன் பிச்சைக் கேட்டான். இதை நீங்க விட்டீங்கன்னா..? அப்புறம் தெனம் பிச்சைக்காரங்கதான் உங்க ஓட்டல்ல இருப்பாங்க” என்ற எனக்குள் ஒரு வன்ம்ம் ஓடியதாகவே பட்டது. ஏன் என்று தெரியவில்லை.
பால்காரன் மீண்டும் நேபாளியிடம் கண்ணைக் காட்ட, அவன் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் அதே ஸ்பீடில் போய், அவன் கையைப் பிடித்திழுத்து வெளியே கூப்பிட்டான். அவன் அவனிடமிருந்து தன் கையை விதிர்த்து விலக்கிக் கொள்ளும் உத்வேகத்தோடு, உதறி “ஆள் வாங்க போயிருக்காங்க சார்..” என்றான்.
நேபாளி ஸ்பஷ்டமாய் “வா.. வெளியே.. போயிருக்காங்கன்னு தெரியும் வா..” என்று அவனை நெட்டித்தள்ள, அவன் மேலும் திமிறினான். அவனின் எதிர்ப்பு நேபாளிக்கு கோபத்தை மூட்டியது. மேலும் ஆவேசத்துடன் அவன் முதுகில் தள்ள, அவன் வாசலில் வந்து விழுந்தான். விழுந்தவன் மீண்டும் எழுந்து கடைக்குள் போக முற்பட, இம்முறை நேபாளி பளீரென கன்னத்தில் அறைந்தான். அடிதாங்காமல் அவன் சுருண்டு விழந்து மீண்டும் எழ முற்பட்டான்.
“யோவ். என்னய்யா பிரச்சனை அங்க..” என்றபடி மேனேஜர் வர, பின்னாடியே ஒரு லுங்கி கட்டிய, வெள்ளைச் சட்டை அரசியல்வாதி போல இருந்தவரும் பின்னாடி வர. நேபாளியும் பால்காரனும் நடந்த்தை சொன்னார்கள். பின்னால் வந்த அரசியல்வாதி போன்றவர்.. “நான் தான்யா டிபன் வாங்த்தர்றேன்னு சொல்லி நிக்கச் சொன்னேன். அழுக்கான ஆளாயிருந்தா இங்க வந்து சாப்பிடக் கூடாதா?” என்றபடி, அவனை எழுப்பி கையில் பில்லைக் கொடுத்து ‘டேய்.. நீயே போய் வாங்கி அங்க உக்காந்து சாப்பிடு” என்று சொல்லிவிட்டு.. எல்லோரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கிளம்பினார்.
எனக்கு சுருக்கென்றது.என்னை நினைத்து எனக்கே அசிங்கமாய் இருந்தது. நான் செய்தது சரிதான் என்று ஒரு பக்கம் ஆணித்தரமாய் நம்பினாலும், இன்னொரு பக்கம் பாவம் பசி அவனுக்கு என்ற எண்ணமும் வரத்தான் செய்தது. நான் சொல்லாவிட்டால் அவர்கள் அவனை பார்த்திருக்க போவதேயில்லை. அவனை காட்டிக் கொடுத்து நான் என்ன சாதித்தேன்? அவனுக்கு அடி வாங்கிக் கொடுத்ததைத் தவிர?. பிச்சையெடுப்பவன் கையேந்திபவனில்தான் பிச்சையெடுக்கணும் என்ற எண்ணம் எனக்குள் ஏன்? என்றெல்லாம் களேபரமான எண்ணங்கள் ஓடியது.
அழுக்கன் கையில் பெரிய தோசையுடன் வந்து கடைசி டேபிளில் வந்து நின்றான். அவசர அவசரமாய் சாப்பிட்டபடி வெளியே பார்த்தான். அவன் என்னைப் பார்ப்பது போலிருந்தது. சட்டென பாலைக் குடித்துவிட்டு, தலை குனிந்தபடி வண்டியை கிளப்பினேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
சில சமயம் இது போல் ஏற்படும் மனித இயல்பு "பொய்" கதை போல் இருந்தது
https://www.google.com/bookmarks/l#!threadID=G9N3ruq-ipLw%2FBDRbuggoQkvGnmYcm
visit bookmarks.google.com
or google.com/bookmarks
u should create a list before storing urls in it...