Thottal Thodarum

Jun 4, 2011

பாடும் நிலா பாலு.

முப்பது லட்சம் ஹிட்ஸுகளை அளித்து மேலும் என்னை ஆதரிக்கும் வாசக, வாசகியர்களுக்கும், சக பதிவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல..சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

spb தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், சந்திரபாபு, ஏம்.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று வரிசைக் கட்டிக் கொண்டு தமிழ் சினிமாவையே தங்கள் குரலினால் கட்டிப் போட்டிருந்த பாடகர்கள் எல்லாம் இருந்தாலும் டி.எம்.எஸ் என்ற ஒரு குரல் தான் அரசாட்சி செய்து கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் புதிய தென்றலாய் ஒரு குரல் மெல்ல தமிழ் சினிமாவில் மையம் கொண்டு புயலாய் மாறி நம்மை எல்லாம் இசையெனும் சூறாவளிக் காற்றில் அலைக்கழித்துக் கொண்டிருப்பவர் நம் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.இன்ஜினியரான எஸ்.பி.பிக்கு பாடுவது என்பது சிறுவயதிலிருந்தே ஒரு ஹாபியாகத்தான் இருந்தது. ஹாபியாக இருந்தது மேலும் ஆர்வமாக மாறி இசை உபகரணங்களை இசைக்க பயில ஆரம்பித்தார். சென்னையில் இருக்கும் தெலுங்கு கலாசார மையம் நடத்திய அமெச்சூர் பாடகர்கள் போட்டியில் பங்குபெற்று முதல் பரிசைப் பெற்றது இவரது வாழ்வில் நிகழ்ந்த பெரிய திருப்பமாகும். அப்போதுதான் தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணியை அவர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 45000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி, மராத்தி, ஆங்கிலம்,பஞ்சாபி, துளு, சமஸ்கிருதம்,  அசாமி, படுகா, கொங்கணி என்று பதினைந்துக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் பாடல்களை பாடியிருப்பவர்.

இவர் இசையமைப்பாளர்களை வாய்ப்புக்காக பாடிக் காட்டும் போது அவர் பாடும் பாடல் பி.பி ஸ்ரீனிவாசின் நிலவே என்னிடம் மயங்காதே என்கிற பாடலைத்தான் பாடுவாராம். பாடகராவதற்கு முன்பு இவர் ஒரு லைட் மியூசிக் குழுவை நடத்தி வந்திருக்கிறார். அதில் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர் குழுவின் மெம்பர்கள். இசைக்குழுவின் பெயர் அனிருத்தா.. இவர்களின் நட்பு பின்னாளில் ஒவ்வொருவருடய வாழ்வின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது என்றால் அது உண்மை.

தெலுங்கில் கோதண்டபாணி அவர்களின் இசையில் மரியாதை ராமண்ணா என்கிற படத்தில் தான் எஸ்.பி.பி தன் முதல் பாடலை பாடினார். தமிழில் டி.எம்.எஸ் என்பவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தது போல தெலுங்கில் கண்டசாலா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தான் எஸ்.பி.பி அறிமுகமானார்.  அவரின் முதல் தமிழ்ப்பாடல் ஜெமினிகணேசன் நடித்த சாந்தி நிலையம் என்னும் படத்தில் பாட ஆரம்பித்தாலும். எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா தான் அவரின் மாபெரும் புகழுக்கு அச்சாரமாய் அமைந்தது. மலையாளத்தில் ரஹ்மானின் தந்தை சேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார். தன்னை இசையுலகிற்கு அறிமுகப்படுத்திய கோதண்டபாணி அவர்களின் பெயரில் தான் சென்னையில் ரிக்கார்டிங் ஸ்டூடியோ அமைத்திருக்கிறார்.

இப்படி ஆரம்பித்த இவரது இசைப் பயணம் கே.பாலச்சந்தரின் இந்தி பிரவேசமான ஏக் துஜே கேலியேவில் அகில இந்தியாவையே மயக்கிக் கட்டிப் போட்டது. அதன் பிறகு சில வருடங்களுக்கு ஹிந்த்யில் இவர் பாடியதெல்லாம் ஹிட் என்ற நிலையில் கூட வழக்கம் போல வடநாட்டு இசையமைப்பாளர்கள், பாடகர்களின் சதியால் பெரிதாக நிலைக்க முடியவில்லை என்பது வருத்தமான செய்தியே. இத்தனைக்கும் இவரை பற்றி யார் கேட்டாலும் ஒரு நல்ல அபிமானத்தைத்தான் சொல்வார்களே தவிர மாற்றாய் சொல்லி கேட்டதில்லை.

ஒரு முறை என் தந்தையின் படத்திற்கான பாடல் பதிவு. ஏற்கனவே ஒரு பாடலை மனோ பாடி ரிக்கார்டிங் முடிந்துவிட்டது. அடுத்தப் பாடல் எஸ்.பி.பி தான் பாட வேண்டும் என்று நான் அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். “அம்மம்மா இது என்ன அதிசயம்” என்கிற அந்த பாடலை கதைப்படி ஹீரோ பைக் ஓட்டியபடி பாட வேண்டும். அதற்கேற்றார்ப் போல இசையமைப்பாளரும் இசையமைத்திருந்தார். படத்தின் பட்ஜெட் காரணமாய் வேறு யாராவது புது பாடகர்களை போட்டு பாடலாம் என்று பேசிக் கொண்டிருந்தபோது நான் மட்டும் அடம் பிடித்தேன் இதை எஸ்.பி.பி பாடினால்தான் ஆயிற்று என்று. நான் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். படத்தின் ட்யூன்களை பெறும் போது நானும் கூட இருப்பேன். இதன் மூலமாவாவது எஸ்.பி.பியை ஒரு முறை நேரில் பார்த்து விடலாமே என்று ஆசையும் கூடத்தான். அவரது இசைக்கூடமான கோதண்டபாணி ஸ்டூடியோவில்தான் ரிக்கார்டிங் ஆனது. பாட்டின் ட்யூனை கேட்ட மாத்திரத்தில் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் இசையமைப்பாளரைக்கூப்பிட்டு பாராட்டிவிட்டு.. ஒரு சின்ன ஐடியா..  சொல்லலாமா என்று கேட்டுவிட்டு, பாட்டின் ரிததின் பீட்டை கொஞ்சம்கூட்டி வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். அவரின் கருத்து சரி என்று உணர்ந்த இசையமைப்பாளர் சரி என்றதும் ஒரே டேக்கில் பாடி முடித்துவிட்டு. ஏற்கனவே எடுத்த பாடலை போட்டுக் கேட்டுவிட்டு. மனோவை மிகவும் பாராட்டினார். அதான் எஸ்.பி.பி. அப்படம் வெளிவராமலேயே போய் ஒரு நல்ல பாடல் வெளியுலகுக்கு தெரியாமலேயே போய்விட்டது இன்றளவில் வருத்தமே.

அவரின் பாடலகளைப் பற்றி, ஆறு முறை தேசிய விருது வாங்கியதைப் பற்றி, பிலிம்பேர் விருதுகள், அவர் நடித்தது, இசையமைத்த படங்களைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டே, எழுதிக் கொண்டே போகலாம்.  ஆனால் இந்த பதிவு அதற்காக அல்ல.. இன்று பாடும் நிலா பாலுவின் பிறந்தநாள். இந்நாளின் அவர் மேலும் பல பாடல்களைப்  பாடி,  நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

karthik said...

மிகவும் நல்ல பதிவு. பாடும் நிலா S.P.B. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Nice Post!!! Sharing your thoughts with SPB. பாடும் நிலா S.P.Balasubramaniam அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
God blesses Him more success, Joy,Peace and Good Health.

ஷர்புதீன் said...

சினிமா உலகில் அடியேனுக்கு பிடித்த சொற்ப மனிதர்களில் ஒருத்தருக்கு நேற்று பிறந்த நாள், இன்னொருத்தருக்கு இன்று

King Viswa said...

நிஜ வாழ்க்கையிலும் ஒரு நல்ல மனிதர்.

கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

Selva said...

எம்.ஜி.ஆர் அவர்களின் அடிமைப் பெண் படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் கனிவான குரலில் வந்த ஆயிரம் நிலவே வா என்ற அந்த தேமதுரத் தமிழ்ப் பாடல் காலத்தால் அழியாதது. "இயற்கை எனும் இளையகன்னி",
"பொட்டு வைத்த முகமோ",
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்" போன்ற எஸ்.பி.பாலாவின் ஆரம்பக் காலப் பாடல்கள் கூட இன்றும் கேட்க இனிமையானவை.
எஸ்.பி.பியின் பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய தங்களின் பதிவு மிக அருமை.

அருண் said...

பதிவு அருமை,உண்மையான ரசிகனின் வாழ்த்துக்கள் அவரை நீடுழி வாழ வைக்கும்.நானும் வாழ்த்துகிறேன்.
-அருண்-

எல் கே said...

அவரோட பணிவுதான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு

ராஜரத்தினம் said...

அப்ப ஜேசுதாஸ் உங்களுக்கு பிடிக்காத பாடகரா? நான் அவரின் தீவிர ரசிகன். அவரை பற்றி எதுவும் பிறந்த நாள் பதிவு எதுவும் போடவில்லையே?

Cable சங்கர் said...

ஏசுதாஸையும் எனக்கு பிடிக்கும் ஆனால் அவரை விட எஸ்.பி.பி ரொம்பவும் ப்டிக்கும். சமீபத்திய பாடகர்களில் கார்த்திக்கும், நரேஷ் ஐயரையும் பிடிக்கும்.

ஷர்புதீன் said...

தல, எங்கே பார்த்தாலும் இந்த கேள்விதான் தல, ரஜினி பிடிச்சா கமலா பிடிக்காதா என்று கேட்குறது., படிச்சவங்கதான் பதிவுலகுல இருக்காங்கன்னு பெர்மைபட்டேன்.,


இப்ப அந்த கேள்வி கெட்ட நண்பருக்கு என்னோட கேள்வி - கேபிள் சங்கரின் பதிவு பிடிச்சா உங்களுக்கு சி.பி.செந்தில்குமாரின் பதிவு பிடிக்காதா?

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்ல பதிவு. பாடும் நிலா S.P.B. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

எந்தப் பதிப்பகம் என்று நினைவில் இல்லை. சென்னை கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் SPB-சரிதையை கொஞ்சம் படிக்க நேர்ந்தது. சுவாரஸ்யமான புத்தகம். ஒரு சில பக்கங்களை அங்கேயே புரட்டிப் படித்துவிட்டு வைத்துவிட்டேன். ஆரம்பத்தில் பட்ட பல கஷ்டங்கள் அதில் இருக்கும். எத்தனையோ புத்தகங்களை விலை கொடுத்து வாங்கியவன் அதனை வாங்காமல் விட்டுவிட்டேன்.

அதே போல இயக்குனர் பாக்கியராஜின் புத்தகமும் வாங்காமல் விட்டுவிட்டேன். இரண்டுமே அருமையான புத்தகங்கள்.

மதன் said...

http://azhagiyalkadhaigal.blogspot.com/2010/04/blog-post_23.html

மதன் said...

http://azhagiyalkadhaigal.blogspot.com/2010/04/blog-post_23.html

Anonymous said...

//எம்.ஜி.ஆர் அவர்களின் அடிமைப் பெண் படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் கனிவான குரலில் வந்த ஆயிரம் நிலவே வா என்ற அந்த தேமதுரத் தமிழ்ப் பாடல் காலத்தால் அழியாதது. "இயற்கை எனும் இளையகன்னி",
"பொட்டு வைத்த முகமோ",
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்" போன்ற எஸ்.பி.பாலாவின் ஆரம்பக் காலப் பாடல்கள் கூட இன்றும் கேட்க இனிமையானவை.
எஸ்.பி.பியின் பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய தங்களின் பதிவு மிக அருமை.//

கோவையிலும் தொலைககாட்சியிலும் பாலுஜியே சொன்னது இதே அடிமைப்பெண் படத்தில் வெளிவராத அம்மா செண்டிமெண்ட் பாடல் உள்ளது உங்களுக்கு தெரியுமா? மேலும் விபரங்களூக்கு இங்கே சென்று பார்க்கலாம். http://myspb.blogspot.in/2007/04/blog-post_16.html