மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/ மால்கள்-2
முந்தைய பதிவில் தேவி திரையரங்க வளாகம் செய்த தில்லாலங்கடியைப் பற்றி சொன்னேன் அல்லவா? இதோ இன்னொரு திரையரங்கம். சென்னையின் முதல் மால் என்ற பெருமையை சொல்லும் அரங்கம் இது. அபிராமி மால். இதன் கட்டமைப்பை பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியாது ஏனென்றால் ஏற்கனவே இருந்த தியேட்டருக்கு முன் இன்னொரு பில்டிங் கட்டி, பழைய தியேட்டர் கட்டிடத்தோடு இணைத்து ஒரு மாதிரி குழப்படியாய் ஒரு கட்டிடம் கட்டியிருப்பார்கள்.
அதை விடுங்கள். இந்த திரையரங்கை மால் என்பதால் அரசின் அதிக பட்ச விலையான 120 ரூபாய் வைக்க முடியும். வெளிப்படையாய் பார்த்தால் அவர்களின் டிக்கெட் விலை சரிதான். ஆனால் உள்ளடியாய் அவர்கள் செய்யும் வேலையில் தான் தில்லாலங்கடி. 180 ரூபாய்க்கு ஒரு டிக்கெட் விற்கிறார்கள். கேட்டால் இன்க்லைண்ட் சீட்டுக்கள் எல்லாம் வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். சரி.. வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு கொடுக்கும் டிக்கெட்டு 120 ரூபாய் டிக்கெட் தான். மீதம் உள்ள அறுபது ரூபாய்க்கு சீட்டுக் கேட்டால் தர மாட்டார்கள். அப்போது அந்த அறுபது ரூபாய் விநியோகஸ்தர்களுக்கு கணக்கு காட்டபடுமா? என்றால் அதுவும் கேள்விக் குறி. கேள்வி கேட்டால் அதற்கு மரியாதையான பதிலும் கிடைப்பதில்லை.
புஷ் பேக் சீட்டுக்கள், கிட்டத்தட்ட ஒரு ஹோட்டலையே தியேட்டர் காண்டீனில் கிடைக்கச் செய்த பெருமை, ஏகப்பட்ட விளையாட்டு, மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மால். லிப்ட் மூலம் கார்களை ஐந்தாவது மாடிக்கு செல்லும் வசதி, என்று ப்ளஸுகள் நிறைய இருந்தாலும் ஒரு மினி ரங்கநாதன் தெருவை ஒரு மாலினுள் அடைத்து வைத்தார்ப் போல தடுக்கி விழுந்தால் ஏதாவது வழியில் உள்ள கடையின் மேல் தான் விழ வேண்டும். எங்கு பார்த்தாலும் கடைகள் ஓட்டல்கள், இக்லி பிக்கிலி விற்கும் கடைகள், மிக குறுகிய வாசல்கள், மாடிப் படிக்கட்டுக்கள் என்று அமைக்கப்பட்ட இந்த மாலில் திடீர் அசம்பாவிதம் என்றால் நிச்சயம் ஒரு ஐம்பது பேராவது நெரிசலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் அதிகம். நான் என் குடும்பத்தை இங்கே அழைத்துப் போவதில்லை என்று முடிவெடுத்து வருடங்கள் ஆகிவிட்டது. நானே எப்போதாவது தான் இந்த திரையரங்குக்கிற்கு செல்வேன். சமீபத்தில் இங்கே ஒரு தீவிபத்து நடந்தது. நல்ல வேளை மால் அன்றைய நாள் தொடக்கத்திற்கு முன்னே நடந்துவிட்டபடியாய் உயிர்சேதம் இல்லை. யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இதே மக்கள் கூட்டம் வரும் நாளில் நடந்திருந்தால் மிகப் பெரிய விபத்தாக நடந்திருக்கும். நாளுக்கு நாள் பெருகி வரும் குட்டிக் கடைகள், பாதுகாப்பில்லாத தன்மை, இஷ்டமாயிருந்தா டிக்கெட் வாங்கும் எனும் மனப்பான்மை இப்படி எல்லாமே இங்கே ப்ரச்சனையாயிருக்கிறது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Watch tamil funny videos online visit http://www.funtamilvideos.com