Dec 7, 2012

எஸ்.ராவின் பேருரையும் - புத்தக விற்பனையும்

கடந்த மூன்று நாட்களாய் எஸ்.ராவின் பேருரை நிகழ்ச்சிக்கு போய் வருகிறேன். நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் தான் போக முடிகிறது. வேலைகள். இருந்தாலும் அங்கே ஆஜராவதில் ஒரு சின்ன சந்தோஷம் பல பழைய நண்பர்கள், வாசகர்கள், என்று பல பேரை சந்திப்பதால். பேருரை முதல் ரெண்டு நாளை விட எனக்கு நேற்று சத்யஜித்ரேவை பற்றியது பேசியது சுவாரஸ்யமாய் இருந்தது. ஒரு வேளை நம்மூர்காரராக இருப்பதால் இருக்குமோ? உட்கார இடமின்றி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் கூறும் பல படங்களை நான் ஏற்கனவே பார்த்ததிருந்ததினால் கேட்ட விஷயத்தையே கேட்பது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புதியதாய் கேள்விப்படுகிறவர்களுக்கு அப்படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை உண்டு பண்ணுகிறார்.  மனுஷர்  நின்ன வாக்கில் ரெஸ்டே இல்லாமல் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் பேசுகிறார். எதிர்காலத்தில் எஸ்.ரா ரெகமெண்ட் பண்ணிய படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் வெளிவரும் நற்படங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோமாக.


அரங்கத்திற்கு வெளியே உயிர்மையும், நாகரத்னா பதிப்பகமும் குட்டியாய் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். உயிர்மையில் எஸ்.ராவின் புத்தகத்தை விட சாருவின் புத்தகங்கள் அதிகம் இருந்தது. புத்தகங்கள் வாங்கப்படுவதை விட, உலக சினிமா பைரஸி டிவிடிக்கள்  நன்கு விற்பனையாகிறது. இலவச டீ ஆறாய் ஓடுகிறது. நடுவில் ஒரு  நாள் அந்த இடத்தின் கேர்டேக்கர் வெங்காய சமோசா விற்றார். வாசனை மூக்கை துளைத்ததினால் ஆறிப் போயிருந்தாலும் வாங்காமல் இருக்க முடியவில்லை.  

நிகழ்ச்சி முடிந்து ரெண்டு மணி நேரமாவது யாராவது நண்பர்களுடன் இலக்கிய, சினிமா, அரசியல் அரட்டை போகிறது. பேச்சைக் கேட்க வந்தவர்கள் பெரும்பாலும் புத்தகம் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் நாகரத்னா குகன். நேற்று முன்தினம் நிகழ்ச்சி முடிந்து கிளம்ப யத்தனித்த போது, சிறு பாத்திர நடிக நண்பர் ஒருவர் வந்து கை குலுக்கி என்னை ஞாபகமிருக்கா? என்று என் ஹார்ட் டிஸ்கை நிரடி விட்டார். சொன்னேன். பெரிய சந்தோஷம் முகத்தில்.பக்கத்தில் இருந்தவரை பெருமையாய் பார்த்தபடி.. “அப்புறம் ஜீ.. பெரிய ஆளாயிட்டீங்க. உங்க புத்தகமெல்லாம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். தோ.. இங்கே கூட உங்களோட சினிமா வியாபாரம் புத்தகம் பார்த்தேன். இவர் நம்ம நண்பர், சினிமா தயாரிப்பாளர் ஆகணும்னு ஆர்வத்துல வந்திருக்கிறார். அவரு புக்கை வாங்கலாம்னு எடுத்துட்டாரு.. அப்பத்தான் அவர்ட்ட சொன்னேன். இதை எழுதினது நம்ம நண்பர்தான்னு. எனக்கே சினிமா பத்தி நிறைய விஷயம் தெரியும். அதையும் மீறி சந்தேகம் வந்தா புத்தகத்தை வாங்கலாம்னு கூட்ட்டிட்டு வந்திட்டேன். என்ன நான் சொல்றது? ‘ என்று மிகப் பெருமையாய் தனக்கு எல்லாம் தெரியும் என்பதை அந்த தயாரிப்பாளரிடம் பிஸ்து காட்டினார். இவரோட பெரும பீத்த களையன் வேலைக்கு என் புத்தகத்தை பலி போட்டுவிட்டு என்னிடமே கேட்பவரிடம் என்ன பதில் சொல்வது? “ஆமாண்ணே.. உங்களுக்கு தெரியாததையா நான் எழுதிறப் போறேன். உங்க மாதிரி ஆளுதாணே இவரை மாதிரி புது தயாரிப்பாளருக்கு சரி’ என்றேன்.
கேபிள் சங்கர்

3 comments:

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
என் புத்தகத்தை பலி போட்டுவிட்டு என்னிடமே கேட்பவரிடம் என்ன பதில் சொல்வது?
//
:)))

தமிழ் பையன் said...

கடைசி பத்தி கொஞ்சம் தற்பெருமையாய் அமைந்துவிட்டது. அது உங்கள் எண்ணம் இல்லை, சிறு பாத்திர நடிகரின் அலட்டலைப் பற்றித் தான் எழுதி இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

Anbazhagan Ramalingam said...
This comment has been removed by the author.