பார்க்கிங் லாட்டுகள் ஆகும் சென்னை தெருக்கள்
சென்னையில் இரு சக்கர வண்டிகளின் பெருக்கம் ஆரம்பித்த காலத்தில் திருவல்லிக்கேணி போன்ற மேன்ஷன் ஏரியாக்களில் இரவு நேரங்களில் பெரிய வண்டிகளோ, கார்களோ செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே தங்கியிருக்கும் பேச்சுலர்களின் இரு சக்கர வண்டிகள் தெருவெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாய்த்தான் இருந்தது. பின்பு சென்னையில் குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இருக்கும் இடமெல்லாம் ரூமாய் கட்டி வாடகைக்கு விட்டதால் அம்மாதிரி வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லோரும் இரவு நேரங்களில் தங்கள் வாகனங்களை தெருவில்தான் வைக்க வேண்டியிருக்க, இன்னும் இரவு நேர தெரு ஆக்கிரமிப்பு அதிகரித்தது.
கொஞ்சம் பொருளாதார வசதி வந்தது, கார் லோன் போட்டு ஒரு மாருதியோ, அல்லது சாண்ட்ரோவோ வாங்கிய பல சொந்த, வாடகை வீட்டுக்காரர்களின் பார்க்கிங் அவர்கள் வீட்டு வாசலாகவே ஆகிவிட, இரு சக்கர வாகனம், கார்கள் என்று ஆக்கிரமிக்க இன்னும் கீக்கிடமானது தெருக்கள். கொஞ்சம் அகலமான தெருக்களாய் இருந்தால் அந்த தெருக்களில் எல்லாம் ட்ராவல்ஸ் வண்டிகள் போட ஆர்மபித்தார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் சென்னையின் அனைத்து தெருக்களும் பார்க்கிங் லாட்டுகளாகவே மாறிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வரும் உறவினர்கள் வண்டி நிறுத்துவதற்கு எல்லாம் அடி தடி சண்டை ஆகும் நிலை ஒவ்வொரு தெருவில் உருவாகி பக்கத்து பக்கத்து வீடு இந்தியா பாகிஸ்தான் போல இருக்கிறது.
இவற்றின் உச்சமாய் கால்டாக்ஸிகளில் வருகை தெரு முழுக்கவே அடைத்து கொள்கிறது. ஒரு காலத்தில் கால்டாக்ஸி ஆரம்பக் கட்டங்களில் வண்டியை பார்க் செய்ய அவர்களே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கே வைத்திருந்தார்கள். ஏனென்றால் வண்டிகளை கம்பெனியே வாங்கி விடும். ஆனால் இன்றைய நிலையோ அப்படியல்ல. அட்டாச்மெண்ட் என்கிற முறையில் யார் வேண்டுமானாலும் வண்டியை வாங்கி அவர்களிடம் வாடகைக்கு விட்டுக் கொள்ளலாம். ஆதனால் வண்டிக்கு சவாரி கொடுப்பது மட்டுமே அவர்களின் வேலையாகிப் போக, வண்டி சவாரி போக நேரங்களில் வண்டியை பார்க் செய்ய தெருக்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். இன்றைக்கு சென்னையில் சுமார் 10,000 கால்டாக்ஸிகளுக்கு மேல் இருக்கும், இது தவிர, ட்ராவல்ஸ் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், சொந்த உபயோகக் கார்கள் என்று பெருகிக் கொண்டேயிருக்கிறது. சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு பெரிய குறை பொதுமக்களின் கார்களை வைக்க அங்கே இடமேயிருப்பதில்லை என்று. ஏனென்றால் அங்கே பெரும்பாலும், கால்டாக்ஸிகள் ஆக்கிரமித்துக் கொள்ள, என்னதான் அஃபீஷியலாய் அவர்கள் உரிமை பெற்று அங்கே பார்க் செய்திருந்தாலும், பொதுமக்களுக்கு பயன்படாத நிலையில் இருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு நிர்வாகமும் ஏதும் செய்த்தாய் தெரியவில்லை.
இதன் நடுவில் இன்னொரு புதிய ப்ரச்சனை ஒன்று உருவாகியிருக்கிறது. சம்பந்தமேயில்லாத ஏரியவிலிருந்து புதிய, பழைய இரு சக்கர வாகனங்களை நடு இரவில் வந்து இறக்கிவிட்டு போவது அதாவது யாரோ ஒரு மார்வாடி பைனான்சியர் இரு சக்கர வண்டிகளுக்கு ஃபைனான்ஸ் செய்யும் தொழில் செய்ய, அவர்களின் புதிய வண்டிகள், பணம் கட்டாமல் இருக்கும் கஸ்டமர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் வண்டிகள் அனைத்தையும் இம்மாதிரி சிறு தெருக்களில் இரவு நேரங்களில் இறக்கிவிட்டுவிட்டு, ரெண்டொரு நாட்களில் எடுத்துப் போகிறார்கள். ஒரு காமெடி என்னவென்றால் இந்த மார்வாடியின் தொழிலும், கடையும் எங்கேயிருக்கிறது என்றால் அவர் பூந்தமல்லியில் வியாபாரம் செய்ய, வண்டி பார்க் செய்யும் இடம் சைதாப்பேட்டையாய் இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த வண்டி இறக்கும் வேலையை கண்டுபிடித்து என் தெருவில் அதை களைந்து எடுத்தேன். இப்படி கிடைக்கும் இடமெல்லாம் வண்டி பார்க் செய்தால் நாளை ஒரு அவசர ஆபத்துக்கு ஆம்புலன்ஸோ, அல்லது தீயணைப்பு வண்டியோ கூட ஏரியாக்களின் உள் வர முடியாமல் போய்விடும்.
பல மாடி கட்டிடம் கட்டுகிறவர்கள் எபப்டி தங்கள் கஸ்டமர்களின் வருகைக்கு பார்க்கிங்கோடு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற சட்டமிருக்கிறதோ அது போல கமர்ஷியல் தொழில் செய்யும் ட்ராவல்ஸ், கால்டாக்ஸி போன்ற கம்பெனிகளிடமிருந்து அவர்கள் வண்டி பார்க் செய்யும் இடத்திற்கு சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இரவு நேரங்களில் பார்க் செய்ய ஃப்ரீபெய்ட் பார்க்கிங் சீட்டுகளை வைப்பது போல அரசே இடம் ஒதுக்கி கமர்ஷியல் வண்டிகளை வைகக் அனுமதிக்கலாம் இல்லையா? அட்லீஸ்ட் விலையில்லா விஷயங்களை கொடுக்க காசாவது வரும்..
கேபிள் சங்கர்
Comments
சென்னை ஒரு சிறந்த ந்கரம் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்கு சென்னை நகருக்கான ஒரு வாகன நிறுத்தக் கொள்கை கட்டாயம் தேவை. இது குறித்து பின்வரும் ஆவணத்தின் 31, 32 ஆம் பக்கங்களில் காண்க:
http://www.scribd.com/doc/96495266/PMK-Draft-Transport-Policy-for-Chennai-City