Thottal Thodarum

Dec 18, 2012

சாப்பாட்டுக்கடை - மங்களாம்பிகா காபி பார்

கும்பகோணம் என்றதும் எல்லோருக்கும் டிகிரி காப்பி ஞாபகம் வரும். அதே போல அங்குள்ள குட்டி குட்டி மெஸ்கள் ஞாபகம் வராமல் போனால் ஆச்சர்யம்தான். என் ஞாபகத்தில் அங்கே மாமி மெஸ் என்றொரு மெஸ் இருந்தது. சென்ற முறை சாப்பிடப் போன போது சீக்கிரம் மூடிவிட்டார்கள். இம்முறை போனதும் அம்மெஸ்ஸை காணோம். என்ன ஆயிற்று என்று விசாரித்தால் மூடிவிட்டார்களாம்.  அதை கேள்விப் பட்டு அடடா என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் அது போனா என்ன? இங்க  இன்னொரு மெஸ் மாதிரியான பழைய உணவகம் இருக்கு வாங்க.. என்று அழைத்துப் போனார். அது தான் இந்த மங்களாம்பிகா காபி பார். மசாலா க்ஃபே போல ஒரு உணவகம்.கும்பேஸ்வரர் கோயிலுக்கு போகும் நடையில் இரண்டு பக்கமும், கடைகளாய் இருக்க, அதில் ஒன்றாய் இருந்தது இந்த ஓட்டல். டிபிக்கல் மெஸ் போன்ற டேபிள் சேர் வகையறாக்கள். டூரிஸ்டுகள் நிறைய பேர் வருமிடமாகையால் பிஸ்லரி பாட்டில்கள் கல்லாப் பெட்டியின் மீது நிரம்பி வழிந்தது. உட்கார்ந்தவுடன் வாழை இலையை போட்டார்கள். “அப்புறம் என்ன சாப்பிடறேள்?’ என்று கணீர் குரலில் ஒரு நாகேஷ் வந்து கேட்டார். இட்லி என்றேன். சொல்லும் போதே “வேற.. ரவா.. ஸ்பெஷல் ரவா?” என்று கேட்டவர், நகர்ந்து இட்லி கொண்டு வந்து வைத்துவிட்டு, சாம்பார், சட்னி, காரசட்னி வகையராக்களை வைத்துவிட்டு, நகர்ந்தார். இட்லி வழக்கமான ரவையாய் அரைத்து கரைத்ததுதான். ஆனால் அந்த சாம்பார்.. வா..வா..வாவ். என்ன ஒரு டேஸ்டுடா சாமி. அரைத்துவிடப்பட்ட, சாம்பார், தேங்காய் சட்னியுடன் இட்லியை சாப்பிட ஆரம்பித்த அடுத்த வினாடி சாம்பாரின் சுவையால் அடுத்த வாய்க்கு கை  போனது. அதற்குள் ரவா தோசை வந்தது. சும்மா சொல்லக்கூடாது எனது வாழ்நாளில் இப்படி ஒரு மெல்லீசான ரவா தோசையை கடைசி கடைசியாய் திருவல்லிக்கேணி முரளி கபேயில் பார்த்தது. அதற்கு பிறகு இப்படி ஒரு ரவா தோசையை பார்க்கவேயில்லை. 
நல்ல பொன் கலரில்,  நடுவே மொத்தை மாவாய் இல்லாமல் சீரான  பரவலோடு, நல்ல முறுவலுடம் கொடுத்தார்கள். அதன் மேல் டிப்பிக்கல் ஊர் ஸ்டைலில் கொஞ்சம் கெட்டிச் சட்னி வேறு. கேட்கவே வேண்டும் அட்டகாசமான சாம்பார், கார சட்னி. ஒரு விள்ளல் தோசையை வைத்து சாம்பார், சட்னியோடு, வாயில் வைத்த அடுத்த நிமிடம் கரைந்து வழுக்கிக் கொண்டு சென்றது. ஒரு முழு தோசையை இவ்வளவு ஆசையாய் சாப்பிட்டு ரொம்ப வருஷமாகிறது. அப்படி ஒரு சுவை.  எனக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த நாள் குடுமப்த்துடன் அங்கேதான் காலை டிபன். 

சுமார் இருபது வருடங்களும் மேலாக இந்த உணவகம் அங்கே இயங்கி வருகிறதாம். சாதா மாவு, ஸ்பெஷல் மாவு, அடை அவியல் எல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். பூரிக்கு கொடுக்கும் மசால் நன்றாக இருக்கிறது. அதிக உருளைகிழக்கில்லாமல் கொஞ்சம் நீர்க்க, வெங்காயம், கடலப் பருப்போடு வாவ்.. அதுவும் அட்டகாசம். பொடி தோசை என்றதும் வழக்கம் போல காரமில்லாத தோசையாய் இருக்கும் என்று நினைத்தால் நல்ல சுள்ளென்ற கார பொடியுடன் மினுமினுவென எண்ணெய் மினுமினுக்க ஒரு ஸ்பெஷல் மாவு தோசை வந்தது. பொங்கலில் லேசாய் இன்னும் கொஞ்சம் உப்பு வேண்டும் என்றாலும் வழுக்கிக் கொண்டு போனது உத்தமம். Don't Miss This Place.
கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

arul said...

thanks for sharing

Geetha Sambasivam said...

முன்னாடி, அதாவது ஒன்றரை வருடம் முன்னால் கும்பேஸ்வரர் கோயில் வடக்கு வீதியில் இருந்தது. இப்போத்தான் இந்த இடத்துக்கு மாறி இருக்கு. முன்பு பெரியவர் இருந்தப்போ இருந்த சுவையோ, கவனிப்போ, எதுவும் இப்போது இல்லை என்பதே நிஜம். :(

Geetha Sambasivam said...

ஆனாலும் ஓகே. முன்னாடி இருந்த இடத்தைப் பார்த்தால் யாரும் வர மாட்டாங்க. இலையை நாம தான் எடுக்கணும். இப்போவும் அப்படித்தானா? இல்லை, ஆள் இருக்காங்களா? :))))

Geetha Sambasivam said...

நாகேஷ் மாதிரி இருப்பவர்பெயர் பாண்டியன்னு நினைக்கிறேன்.

rajamelaiyur said...

கடந்த வாரம் சாப்பிடேன் .. உண்மையில் அருமை ...

அஜீம்பாஷா said...

நீங்க சாப்பிட்ட மாதிரி உணவகங்கள் திருச்சி ஆண்டாள் தெருவில் முன்பு நிறைய பார்த்திருக்கிறேன் , சாப்பிட்டிருக்கிறேன் , இப்போதைய நிலை தெரியவில்லை.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

தோசையை பார்த்ததும் சாப்பிடத் தூண்டுது....
நல்ல பகிர்வு.

Ganpat said...

விலை விபரங்களையும் குறிப்பிட்டால் உபயோகமாக இருக்குமே!