Krishnam Vande Jagadgurum
பாபு பிடெக் படித்துவிட்டு தாத்தாவின் நாடக ட்ருப்பில் நடித்து வருபவன். அவனது தாத்தா அந்தக்கால பிரபல நாடக கலைஞர். தன் பேரனை வைத்து தன்னுடய கடைசி நாடகமான “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்கிற நாடகத்தை நடத்த மிகவும் ஆசைப் படுகிறார். ஆனால் பாபுவுக்கோ யு.எஸ் போகத்தான் விருப்பம். நாடகத்தில் ஈடுபட்டு வறுமையில் வாட விருப்பமில்லை என்று சொல்லிவிட, அதை தாங்காத தாத்தா இறந்துவிடுகிறார். தன்னுடய அஸ்தியை துங்கபத்ரா கரையில்தான் கரைக்க வேண்டும் என்ற அவருடய கடைசி ஆசையினால் அவருடய அஸ்தியை கரைப்பது மட்டுமில்லாமல், அவருடய நாடகத்தை அங்கேயே அரங்கேற்றுவது என்று முடிவு செய்து கிளம்புகிறான் பாபு. பெல்லாரியில் சுரங்க தொழிலில் மிகப் பெரிய மாபியாவாக வலம் வரும் ரெட்டப்பாவின் கோட்டையில் உள்ளவர்களுடன் சிறு உரசல் ஏற்படுகிறது. ரெட்டப்பாவின் சுரங்க மாபியாவை துகிலுரித்துக் காட்ட தில்லாக வரும் டிவி சேனல் ரிப்போர்ட்டராக தேவிகா வர, பாபுவுக்கும் தேவிகாவுக்கும் வழக்கம் போல காதல். ரெட்டப்பாவிற்கும் கர்நாடக சக்ரவர்த்தி என்பவனுக்கும் உள்ளூரிலேயே பிரச்சனை. இதன் நடுவில் பாபுவின் ஒரிஜினல் பிறப்புப் பற்றி அவனுக்கு தெரிய வர, அதில் சக்ரவர்த்தியினால் தன் குடும்பம் பிரிந்தது என்று தெரிய வருகிறது. ஒரு பக்கம் சகரவர்த்தியை பழிவாங்க, இன்னொரு பக்கம் ரெட்டப்பாவின் கோபத்தை எதிர்கொள்வதுமாய் போராடி எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.
வழக்கமாய் கிரிஷ் தன் எல்லா படங்களிலுமே எங்காவது ஒரு ஓரத்தில் கம்யூனிசம், மாபியா, அல்லது நக்ஸல் என்று அவர்களது உணர்வுகளை கதைகளூடே கலந்துவிடுவார். அதே போல இப்படத்தில் மாபியா, அதை எதிர்க்கும் முதலாளித்துவ டிவி சேனல்கள், ஆதரிக்கும் கரப்டட் அரசு, இன்னொரு பக்கம் அவனால் பாதிக்கப்பட்டவர்களின் கோபம் தோய்ந்த கூட்டம், அவர்கள் நடத்தும் போராட்டம் என இப்படத்தில் விவரித்திருக்கிறார். அதே போல வசனங்கள் படு ஷார்ப்பாக இருக்கும்.சாய் மாதவின் வசனங்கள் பல இடங்களில் ஷார்ப்.
ராணாவுக்கு ஏற்ற கதை தான் ஆனால் பல காட்சிகளில் ஹல்க் போல இருக்கிறார். மிகவும் ஒடுங்கிய கன்னங்களுடன் ஹாலிவுட் தனமான முகமாய் இருப்பதால் பல இடங்களில் எக்ஸ்பிரஷன் மிஸ்சிங். ஒரு பாடலில் ரெண்டு நிமிஷம் வரும் வெங்கடேஷின் முகத்தில் உள்ள கவர்ச்சி இவரது முகத்தில் இல்லாதது குறையே. இந்திய திரைப்படங்களுக்கு நல்ல அழகிய முகமும் தேவை. அதீத உடற்பயிற்சி முகத்தை கெடுக்கிறது. நாடக வசனங்கள் பேசுமிடங்களில் எல்லாம் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார். நடிப்பில் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.
நயன்தாரா வழக்கம் போல கவர்ச்சியாய் இருக்கிறார். நல்ல மழையில் ஒரு பாடல் பாடி சூடேற்றுகிறார். பாதி படம் முழுவதும் கையில் கேமராவுடன் பயணிக்கிறார். நடுவில் காதலிக்கிறார். மற்றபடி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை.
கோட்டா சின்ன கேரக்டரில் வந்தாலும் நச். இன்றைய மேடை நாடகங்களில் நிலையை இவரது கேரக்டரின் மூலம் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ப்ரம்மானந்தம் படத்தில் இருந்தாலும் சிரிப்பதற்கு பெரிதாய் ஏதும் செய்யவில்லை. ஆக்ஷன் காட்சிகள் ராணாவுக்கென்றே ஸ்பெஷலாய் வடிவமைத்தது போல இருக்கிறது.
மணி சர்மாவின் பின்னணியிசை ஓகே. ஆனால் பாடல்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை. குணசேகரின் ஒளிப்பதிவும் ஓகே தான். சுரங்கத்தை வெடி வைக்கும் காட்சிகளில் சிஜி பெட்டராக இருந்திருக்கலாம்.
எங்கேயோ ஆரம்பித்து, பெல்லாரிக்குப் போய், மாபியா, மைனிங், நாடகம், தத்துப்பிள்ளை, பழிவாங்கல், நக்சஸ் என்று நிறைய விஷயங்கள் இருந்தாலும் ஏனோ ஒட்டாமல் ஓடுகிறது இப்படம்.
கேபிள் சங்கர்
Comments
http://youtu.be/Gbv6mDaV_UE