Thottal Thodarum

Dec 27, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் -2012

தமிழ் சினிமா இந்த வருடம் கொஞ்சம் ஆச்சர்யகரமான வருடமாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால் நிச்சயம் பெரிய வசூல் வரும் என்று நம்பி எடுத்த பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொள்ள, கதையும், அதை சொன்ன விதமும் பிடித்துப் போனதால் சிறு முதலீட்டு படங்கள் ஹிட்டாக, மேலும் பல புதிய, சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் உருவாக்கிய வருடமிது. அது மட்டுமில்லாமல் சிறிய படங்களை வாங்க ஆளில்லை என்ற நிலை மாறி நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு புதிய விநியோகஸ்தர்கள் வேறு உருவாகியிருப்பது ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்லும் பாதையை காட்டியிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயமே. சுமார் 168க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது இந்த வருடம். சென்ற வருடத்தை விட இது அதிகம்.


ஜனவரி
வழக்கம் போல பொங்கலுக்கு நண்பன், வேட்டை என்கிற இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தது. ஷங்கரின் இயக்கத்தில் விஜய், 3இடியட்டின் ரீமேக். உலக அளவில் மார்கெட் உள்ள  ஹிந்தியில் சுமார் 35 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தமிழில் சுமார் 65 கோடியில் தயாரித்தார்கள் என்று தகவல். படம் பற்றி விமர்சகர்களிடம் நல்ல பெயர் இருந்தாலும் வசூல் ரீதியில் டெர்ரா ஹிட் என்று தொடர் விளம்பரம் கொடுத்தாலும், படம் போட்ட முதலை எடுக்கவில்லை என்பதே உண்மை. எல்லோரும் முதல் வாரத்தில் போட்ட காசை எடுத்துவிட்டார்கள் என்று சில பல இண்டர்நெட் நம்பர்களை வைத்து சொல்வார்கள். அந்த மொத்த வசூலில், தியேட்டர், விநியோகஸ்தர்களின் பங்கு எப்படி பிரிப்பார்கள் என்று கணக்குப் போட்டு பார்த்தால் அவர்கள் தோல்வியடைந்து எப்படி என்று புரியும். மேலும் இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொளள் சினிமா வியாபாரம் படியுங்கள். அதே நிலைதான் வேட்டைக்கும்.  மைனாவின் வெற்றிக்கு பிறகு முதல் இடத்தில் சறுக்கிய விதார்த்துக்கு அடுத்து வந்த கொள்ளைக்காரனும் கை கொடுக்கவில்லை. வழக்கம் போல சிறு பட்ஜெட் படங்கள் இந்த மாதமும் வந்து சுவடேயில்லாமல் போனது. 

பிப்ரவரி
பாரி, மெரினா, தோனி, ஒரு நடிகையின் கதை, அம்புலி 3டி,முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி? மற்றும் பல சிறு முதலீட்டு படங்கள் வெளி வந்த மாதம்.  மெரினா பாண்டியராஜ் தயாரித்து இயக்கிய படம். மிகச் சிறிய முதலீட்டில், கேனான் 5டியில் சுமார் என்பது லட்சத்தில் தயாரிக்கப்பட்டு, சகாய விலையில் எல்லா ஏரியாக்களையும் சுமார் மூன்று கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட படம். சாட்டிலைட் மட்டுமே சுமார் ஒன்னேகால்கோடிக்கு போனதாய் தகவல். படம் பெரிய அளவில் நன்றாக இல்லாவிட்டாலும் பாண்டியராஜின் பசங்க படத்தின் இம்பாக்டில் ரசிகர்களிடமிருந்த எதிர்பார்ப்பு, நல்ல ஓப்பனிங்கை தர, குறைந்த விலையில் வாங்கப்பட்டதினால் நிறைய பேருக்கு ப்ரேக் ஈவன் கிடைத்த படம். பிரகாஷ் ராஜின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான தோனி, ஓரளவுக்கு ஃபீல் குட் படமாய் அமைந்தாலும் ஏனோ மக்களிடம் எடுபடவில்லை. ப்ரகாஷ்ராஐ கதையின் நாயகனாய் இருப்பதால் பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இளையராஜாவின் இசையும் சொல்லிக் கொள்கிறார்ப் போல் அமையவில்லை.அம்புலி 3டி தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக்  3டி படம். விதயாசமான கதைகளை எடுக்க விரும்பும் இளைஞ்ர்களின் படம். க்ளைமாக்சை மட்டும் கொஞ்சம் யோசித்திருந்தால் நன்றாக அமைந்திருக்க வேண்டிய படம். எல்ரெட் குமாரின் இயக்கத்தில் அதர்வாவின் நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தும் குழப்பமான திரைக்கதையால் தோல்வியை தழுவியது.காதலில் சொதப்புவது எப்படி? குறும்படமாய் பட்டையை கலக்கிய படம் திரைப்படமாகியும் வெற்றி பெற்று குறும்பட இயக்குனர்களுக்கு புதிய கதவை திறந்துவிட்டது. இப்படத்தின் வெற்றி பெரும்பாலும் அர்பன் ஏரியாவில் தான் என்றாலும் குறிப்பிடத்தகுந்த வெற்றி. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியான படம். சுமார் 36 நாட்களில், ரெட் ஒன் கேமராவில் ஷூ ஸ்ட்ரிங் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  தமிழ், தெலுங்கு ஆகிய ரெண்டு மொழிகளிலும் வெளியாகி  வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்ற படமாய் அமைந்த்து. 
ஹிட் - காதலில் சொதப்புவது எப்படி? 
ஆவரேஜ் - மெரினா

மார்ச்
பரிட்சை மாதமாகையால் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கொண்டான் கொடுத்தான், கழுகு, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி போன்ற படங்கள் வெளியாகின. இவற்றும் கழுகு மட்டும் ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தது.

ஏப்ரல்
மீராவுடன் கிருஷ்ணா, அஸ்தமனம், பச்சை என்கிற காத்து, மை, ஆதி நாராயணா, மற்றும் லேட் ரிலீஸ் லீலை யோடு பல சிறு முதலீட்டு படங்களும் வந்தது. இதில் பச்சை என்கிற காத்து மட்டும் ஆங்காங்கே பத்திரிக்கைகளில் பேசப்பட்டது. லீலை படம் நன்றாக வந்திருந்தும், ஆஸ்கர் பிலிம்ஸின் பின்னணியிருந்தும், ஏனோ சரியாக் எடுபடவில்லை. அவர்களும் பெரிதாய் ப்ரோமோட் செய்யவில்லை. ஆனால் இவ்வாண்டின் முதல் சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது யாரும் எதிர்பாராத ஒரு கல் ஒரு கண்ணாடி திரைபடம் தான். ஏழாம் அறிவு படத்தோடு அவர்கள் வெளியிட்ட டீசர் பட்டையை கிளப்ப, அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ய, முதல் சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சுமார் 12 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் நாற்பது கோடிக்கும் மேலாக வசூல் செய்தது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்திற்கு 12 அதிகம் என்றாலும்,கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் தயாரிப்பில் இருந்ததாலும், நிறைய நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாலும் செலவு ஆகியிருக்கும் என்று ஒரு கணிப்பு.

ஹிட் : ஒரு கல் ஒரு கண்ணாடி.

மே
வழக்கு எண் 18/9, கலகலப்பு, ராட்டினம், இஷ்டம் போன்ற படங்கள் வெளியான மாதம், வழக்கு எண் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படமாக அமைந்தாலு வசூல் ரீதியாய் பெரிதாய் ஏதும் செய்யவில்லை. என்ன தான் இப்படத்தின் தயாரிப்பாளர் பணம் வசூலாகிவிட்டது என்று சொன்னாலும் நிஜத்தில் இல்லை என்பதால் இந்த வருட ஹிட் லிஸ்டில் இப்படம் இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். ராட்டினம் என்கிற சின்னப் படம் சுமார் என்பது லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்டு, படம் பார்த்த சினிமா பிரமுகர்கள் அனைவரின் பாராட்டைப் பெற்ற படம். ஏனோ மக்களிடம் ஒழுங்காய் போய்ச் சேரவில்லை. இத்தனைக்கும் இன்றைய தமிழ் சினிமாவின் அன்னதாதா நிறுவனமான வேந்தர் மூவீஸ் தான் வெளியிட்டது என்றாலும் எடுபடவில்லை. ஆனால் இப்படம் மூலமாய் சிறு முதலீட்டு படங்களை வாங்கி வெளியிடும் கலாச்சாரம் உருவாகி தமிழ் சினிமாவின் சிறு முதலீட்டு படங்களுக்கு ஆக்ஸிஜனைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். கலகலப்பு. இந்த வருடத்தில சூப்பர் ஹிட் படம் என்பதையும் யுடிவிக்கு இந்த வருடத்தின் முதல் ஹிட் என்றும் சொல்லலாம். வழக்கமான சுந்தர்.சி வகை காமெடி படம் தான் என்றாலும் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்று சுமார் 5-1/2 கோடியில் தயாரிக்கப்படு, சுமார் 23 கோடி வசூல் செய்த படம்.

ஹிட் கலகலப்பு

ஜூன்
மனம் கொத்திப் பறவை, தடையற தாக்க, கிருஷ்ணவேணி பஞ்சாலை, சகுனி ஆகிய படங்கள் வெளியான மாதம். இதில் மனம் கொத்திப் பறவை குறுகிய பட்ஜெட்டில் தயாராகி, நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம். காமெடி மற்றும் இமானின் பாடல்கள் இருந்தும், எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். தடையறத்தாக்க, அருண்விஜய்க்கு வெகு நாட்கள் கழித்து முதல் வெற்றி, மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், மேக்கிங்கிற்காக பேசப்பட்டது. ஓரளவுக்கு அருண்விஜய்க்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது என்றாலும் வசூல் ரீதியாய் லாபகரமான படமாய் அமையவில்லை. பட். கவனிக்கத்தக்க படமாய் அமைந்தது. கிருஷணவேணி பஞ்சாலை முதல் முறையாய் டெக்னிக்கலாய் ஒரு படத்தை மார்கெட்டிங் ப்ராஜெக்டாய் எம்.பி.ஏ மாணவர்களுக்கு கொடுத்து மார்கெட் செய்யப்பட்ட படம் என்ற வகையில் குறிப்பிட்டு சொல்லலாம்.சகுனி. கார்த்தியின் நடிப்பில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டில் வந்த பெரிய பட்ஜெட் படம். ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியிட்டார்கள். படம் எதிர்பார்த்த அளவு சுவாரஸ்யமில்லாததால் இவ்வருட பெரிய பட்ஜெட் பட தோல்வி வரிசையில் இப்படமும் சேர்ந்தது.

ஜூலை
நான் ஈ, பில்லா2, மாலை பொழுதின் மயக்கத்திலே, பொல்லாங்கு போன்ற படங்கள் வெளியாயின. நான் ஈ, தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு இரண்டிலுமே சூப்பர் டூப்பர் ஹிட்டான படம்.பில்லா 2, அஜித்தின் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாய் அமைந்தது. ஆனால் அதே வேலையில் பெரும் தோல்வியை சந்தித்த படமாகவும் ஆனது. டெக்னிக்கலாய் நன்றாக இருந்தாலும், கண்டெண்ட் சரியில்லாததால் மாபெரும் தோல்வியை சந்தித்து மீண்டும் இவ்வருட பெரிய பட்ஜெட் பட தோல்வி லிஸ்ட் மற்றொரு படமாய் ஆனது. இப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு தான் நான் ஈ வெளியானது. நன்றாய் ஓடிக் கொண்டிருந்த நான் ஈயை தூக்கிவிட்டு, பில்லாவை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவரும் விட்டா போதுமென மீண்டும் நான் ஈக்கு வந்து மொய்த்தார்கள்.
ஹிட் : நான் ஈ

ஆகஸ்ட்
மதுபானக்கடை, பனித்துளி, அட்டகத்தி, நான், எப்படி மனசுக்குள் வந்தாய்?, ஆச்சர்யங்கள், பெருமான், முகமூடி ஆகிய படங்கள் வெளியாகிய மாதம். மதுபானக்கடை, சிறு முதலீட்டில் தரமாக தயாரிக்கப்பட்ட, தமிழ் சினிமா ஒரு கமர்ஷியல் குப்பை என்று திட்டுகிறவர்கள் பாராட்டுப் பெற்ற படம். ஆனால் இம்மாதிரியான நல்ல படத்தை ஒழிப்பதற்கு நம் சட்டங்களும், விநியோக கார்பரெட் கம்பெனிகளும் ஒத்துழைத்திருந்தால் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும். சென்சார் போர்டு இப்படத்திற்கு சரக்கு, பாட்டில் என்றிருப்பதால் ஏ சர்டிபிகேட் தர, அதனால் வரி விலக்கு இல்லை. டிவிக்கு விற்க முடியவில்லை. எனவே படத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் காலி. ஒரே வழி திரையரங்குகளில் வெளியிட்டு சம்பாதிக்க வேண்டும். அதற்கு வரி விலக்கில்லாத படம், தியேட்டர் கிடைக்காமை. போன்ற பல இன்னல்கள் தாண்டி விமர்சகர்கள் பாராட்டை பெற்ற படம். டிவிடியாய் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது இப்படம். அட்டகத்தி. சி.வி.குமார் என்கிற புதிய தயாரிப்பாளர், வெங்கட் பிரபுவின் உதவியாளர் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ஒரு கல்ட் படம் என்றே சொல்ல வேண்டும். பாடல்களும், ட்ரைலரும் இம்பரசிவாக இருக்க, ஸ்டூடியோ க்ரீனினால் வாங்கப்பட்ட முதல் சிறு முதலீட்டுப் படம் என்றதும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட, ஒரு பெரிய படத்துக்கு செய்யும் விளம்பரம் இப்படத்திற்கு ஸ்டூடியோ க்ரீன் செய்தார்கள். விளம்பரம் கொடுத்த அளவிற்கு படமும் வித்யாசமானதாய் அமைந்து போட்ட முதலை கவர் செய்த படமாய் ஆனது. எப்படி மனசுக்குள் வந்தாய்? நான் ஆகிய இருபடங்களின் அடிப்படை கதை ஒன்றாய் இருந்தாலும் மேக்கிங், மற்றும் கண்டெண்டில் நான் வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும். வியபார ரீதியாக ஓரளவுக்க் கையைக் கடித்தாலும், பார்வையாளர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படமாய் அமைந்தது. இந்த மாதத்தில் சிறு முதலீட்டுப்படமாய் வெளிவந்த ஆச்சர்யங்கள் நிஜமாகவே ஆச்சர்யம் தரக்கூடிய படமாய் அமைந்த்து. கொஞ்சம் டெக்னிக்கல், பட்ஜெட், பிரமோஷன் கிடைத்திருந்தால் நிச்சயம் கவனிக்கதக்க படமாய் அமைதிருக்கும். நல்ல படமாய் எடுப்பது மட்டும் ஒரு தயாரிப்பாளரின் வேலையில்லை அதை மக்களிடம் கொண்டு சேர்பதற்கும் சேர்த்து பட்ஜெட் ஒதுக்கினால் தான் வெற்றியடைய முடியும் என்பதை இப்படத்தின் தோல்வி மூலம் மீண்டும் நிருபணமாகியது. இந்த மாதத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படமான முகமூடி. யூடிவிக்கு இன்னொரு அட்டர் ப்ளாப் படமாய் அமைந்து


செப்டம்பர்
பாகன், நண்பனுக்கு பிறகு வெளிவந்த ஸ்ரீகாந்த் படம். நகைச்சுவை படம், வேந்தர் மூவிஸின் வெளியீடு என்று பல ப்ளசுகள் இருந்தாலும் வலுவான கதை, திரைகக்தை இல்லாததால் காமெடி கூட எடுபடாமல் தோல்வியை சந்தித்தது. மன்னாருவின் கதை முடிச்சு சுவாரஸ்யமானதுதான். ஆனால் அதை சொன்னவிதத்தில் அரத பழசாய் இருந்ததால் தோல்வியை சந்திக்க, அதே நிலைதான் நெல்லை சந்திப்பு, போன்ற படங்களின் நிலையும். சாக்ஸேனாவின் முதல் அஃபீஷியல் வெளியீடான சாருலதா பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்பதைப் போல பப்ளிசிட்டிகொடுத்த  பில்டப் படத்தில் இல்லாததால் தோல்வியை தழுவியது. பிரபு சாலமன் தயாரிப்பில் புதிய இயக்குனர் பிரபாகரின் இயக்கதில் வெளியான சாட்டை விமர்சகர்களிடையே இன்றைய அரசு பள்ளிகளின் நிலையை பற்றி சொன்ன படம் என்பதால் நல்ல வரவேற்பை பெற்றாலும் வெகு ஜன ரசிகர்களிடையே நாடகத்தன்மையான காட்சிகளால் வரவேற்பு பெறவில்லை. யுடிவிக்கும், விக்ரமுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் தோல்விப்படமாய் அமைந்தது தாண்டவம். ஈசன், போராளியின் தோல்விக்கு பிறகு சத்தமேயில்லாமல் லோப்ரோபைலில் வெளியான சசிகுமாரின் சுந்தர பாண்டியன் வழக்கமான பழிவாங்கல், நட்பு என்கிற வட்டத்தில் இருந்தாலும், சுவாரஸ்யமான திரைகதை, சூரியின் அளவான நகைச்சுவை எல்லாம் சேர்ந்து ஹிட் படமாக்கியது. சுமார் பதினைந்து கோடிக்கு மேல் வசூல் ஆனதாக சொல்லப்படுகிறது.
ஹிட் : சுந்தர பாண்டியன்.

அக்டோபர்
பெரும் எதிர்பார்ப்போடு வந்தது சூர்யாவின் மாற்றான். சுமார் அறுபது கோடிக்கு தயாரிக்கப்பட்ட இப்படம் வட இந்திய நிறுவனமான ஈராஸ் இண்டர்நேஷனலுக்கு 85 கோடிக்கு விற்கப்பட்ட போது உருவான பரபரப்பை படம் தக்க வைக்கவேயில்லை. என்னதான் மாபெரும் வெற்றி, சூப்பர் ஹிட் என்று சொன்னாலும் இவ்வருடத்திய பெரிய பட்ஜெட் தோல்வி லிஸ்டில் சேர்ந்தது. நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளியான ஆரோகணம் சுமார் நாற்பது லட்சத்தில் தயாரிக்கப்பட்டு, சாட்டிலைட் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷனில் விற்ற மாத்திரத்தில் நல்ல லாபம் சம்பாதித்தது என்றாலும்,வசூல் ரீதியாகவும், வெகு ஜன மக்களின் கவனத்திற்கு செல்லவேயில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இம்மாதத்தின் ஏன் இவ்வருடத்தின் கருப்பு குதிரை என்று ஒரு படத்தை சொல்லப் போனால் அது பிட்சா வாகத்தான் இருக்கும் . சுமார் ஒன்னரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, சங்கம் சினிமாஸ் மூலமாய் விநியோக முறையில் வெளியான இப்படம் சுமார் எட்டு கோடிக்கும் மேல் திரையரங்குகள் மூலம் வசூலானது. அது மட்டுமில்லாமல் சுமார் ஐந்து கோடிக்கும் மேல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்று மற்றும் ரீமேக் ரைட்ஸ், சாட்டிலைட் டிவி ரைட்ஸ் என்று உரிமைகளை விற்ற வகையில் மட்டும் ஐந்து கோடிக்கு மேல் சம்பாதித்த படம். வித்யாசமான கதைக் களன், புத்திசாலித்தனமான இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என்று நல்ல டீம் அமைய,  வெகு ஜன மக்களும் அதை ஏற்றுக் கொண்டு இவ்வாண்டின் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.  இப்படம் ப்ரான்சின் சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் பெஸ்டிவலில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நடந்த உலகப் பட விழாவில் ஜூரி அவார்டை பெற்று உலக சினிமா அரங்கிலும் பிட்சாவின் வெற்றி அரங்கேற ஆரம்பித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாய் அமைந்தது.

ஹிட் :  பிட்சா

நவம்பர்
சில படங்களின் பெயரைக் கேட்கும் போதே எதோ இருக்கும் போல என்ற ஒரு எண்ணத்தை கூட்டும். அதை நிறுபிக்கும் வகையில் அமைந்தது நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். மிகக் குறுகிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்னமே வெளியாக வேண்டியது. தியேட்டர் கிடைகாமையால் யோசனையில் இருந்த நேரத்தில் திரையுலக பிரமுகர்களுக்கு படம் திரையிடப்பட, அனைவராலும் பாராட்டு பெற்றவுடன், நான் நீ என ரெண்டு மூன்று கம்பெனிகள் படத்தை வாங்க போட்டிப் போட, கடைசியாய் ஜே.எஸ்.கேவின் கைக்கு போனது. பிட்சாவின் வெற்றியால் விஜய் சேதுபதிக்கு அங்கீகாரம் கிடைக்க, அதுவேறு இப்படத்தின் ப்ளஸ்சாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், உரிமைகளை விற்ற வகையிலும் இப்படத்தின் பட்ஜெட்டுக்கு பெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வெளியான சிம்புவின் போடாபோடி மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸ் மட்டும் பரவாயில்லை என்று சொல்ல, மற்றவர்கள் எல்லாம் துப்பாக்கியின் சத்தத்தில் போடா என்று போய்விட்டதால் தோல்விப்படமாய் அமைந்தது.பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தமிழ் சினிமாவை புத்துயிரூட்டி நிமிர்ந்து நடக்கச் செய்த பெருமை விஜய்க்கும், ஏ.ஆர். முருகதாஸுக்கும் கிடைக்கச் செய்த படமாய் அமைந்தது துப்பாக்கி. அறுபது கோடியில் தயாரிக்கப்பட்டு, சுமார் என்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட இப்படம் நூறு கோடிக்கும் மேலாய் வசூல் செய்து இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படம் என்கிற லிஸ்டில் சேர்ந்தது.

ஹிட் : துப்பாக்கி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.

டிசம்பர்
பலரது எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த கெளதம் வாசுதேவ் மேனனின் “நீ தானே என் பொன் வசந்தம்” ”கும்கி” “நீர்ப்பறவை” “சட்டம் ஒரு இருட்டறை”  மற்றும் பல சிறு முதலீட்டுப் படங்கள் அதுவும் கடைசி வருடக் கடைசி வாரத்தில் அடித்துப் பிடித்து சுமார் பத்து படங்களுக்கு மேல் வெளியானது. கெளதம் வாசுதேவ் மேனனின் நீ.எ.பொ.வ படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு சில ஏ செண்டர் ஆடியன்சுக்கு மட்டும் படம் பிடித்திருக்க, தெலுங்கில் ஓரளவுக்கு செல்ப் எடுத்திருப்பதாய் சொன்னார்கள். முக்கியமாய் தெலுங்கு வெளிநாட்டு வர்ஷன் நன்றாக போயிருப்பதாய் சொல்கிறார்கள். சரி.. எங்கோ ஒரு இடத்துல ஓடினா சரி. சீனுராமசாமியின் நீர்ப்பறவை ஒரு குழப்படியான கருத்து கந்தசாமி படமாய் அமைந்ததாலும், இலக்கியவாதி எனக் காட்டிக் கொள்பவர்களால் கவனம் பெற, வெகு ஜன ரசிகர்களிடம் கவனம் பெறாமல் போனது. கும்கி வருடக் கடைசியில் ஒரு ஹிட் படம். ஏற்கனவே இமானின் பாடல்கள் ஹிட்டாகியிருக்க, மைனாவுக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவரும் படம், சிவாஜி பேரன் விக்ரம்பிரபுவின் அறிமுகம் என்று பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அத்தனை எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாவிட்டாலும் ஓரளவுக்கு ஈடுகட்டியதால் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.சென்ற வாரக் கடைசி வரை மட்டுமே சுமார் பதினைந்து கோடி வசூலை தொட்டிருக்கிறது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ஹிட் : கும்கி

நண்பன், அம்புலி 3டி,வழக்கு எண் 18/9, நான், கழுகு, சாட்டை, ராட்டினம், தடையறத் தாக்க, மதுபானக்கடை,நீர்ப்பறவை ஆகிய படங்கள் வசூல் ரீதியாய் வெற்றியாக இல்லாவிட்டாலும் மக்களின் கவனத்தை கவர்ந்த படங்களாய் அமைந்தது. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் பழைய தமிழ் படமான சிவாஜிகணேசன் நடித்த “கர்ணன்” திரைப்படம் வெளியானது. வெளியான காலத்தில்  வேட்டைக்காரனோடு போட்டியில் வெளிவந்து பெரிய பெறாத வெற்றியை, 75 லட்சம் ரூபாய் செலவில்  புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் ப்ரிண்டில் வெளிவந்து பெற்றது காலத்தின் கட்டாயம். தமிழகமெங்கும் சுமார் 75 திரையரங்குகளில் வெளி வந்த  கர்ணன் 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாய் விநியோகஸ்தர்கள் மத்தியில் ரிப்போர்ட். இந்த வகையில் பார்த்தால் 2012ன் மாபெரும் வெற்றிப் படம் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹிட் லிஸ்ட் 2012
துப்பாக்கி
ஒரு கல் ஒரு கண்ணாடி
கலகலப்பு
கும்கி
பிட்சா
நான் ஈ
சுந்தர பாண்டியன்
காதலில் சொதப்புவது எப்படி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
கர்ணன்
ஆவரேஜ்
மெரீனா
அட்டகத்தி
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

Unknown said...

சார் நாங்கலாம் கத்துக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு சூப்பர்

Ponchandar said...

சூப்பர்...டூப்பர்...ரிப்போர்ட்...

அடுத்த வருஷம் “விஸ்வரூபம்” மூலம் ஆரம்பிக்கிறது.... எப்படின்னு பார்போம்

Unknown said...

கலகலப்பு ..!

YESRAMESH said...

பாரபட்சமில்லா தொகுப்பு. நல்ல திறனாய்வு.

$und@r dur@i said...

superb analysis....

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான அலசல்! நன்றி!

Anonymous said...

ஆனால் இம்மாதிரியான நல்ல படத்தை ஒழிப்பதற்கு நம் சட்டங்களும், விநியோக கார்பரெட் கம்பெனிகளும் ஒத்துழைத்திருந்தால் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும்.

Do you really intend to use the word 'ஒழிப்பதற்கு' or is it a typo?

Ravikumar Tirupur said...

நாளைய இயக்குனர்களின் திரை வரவான இரண்டு படங்களும் ஹிட் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

R. Jagannathan said...

An un-biased and fair analysis! - R. J.

Ramesh Mani said...

Sir, Really your blog great

G said...

Sir, you missed '3' movie..

குரங்குபெடல் said...



கலகலப்பு ..!

வழக்கமான சுந்தர்.சி வகை காமெடி படம் தான "



இதை சொல்வதற்கு 6 மாசம்
அவகாசம் எடுத்து கொண்ட


அண்ணன் DTH நாராயணன் வாழ்க

Cable சங்கர் said...

குரங்குபெடல் நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே.. நான் வேலை செய்யும் படங்களுக்கு கருத்து சொல்ல மாட்டேனென்று. அது மட்டுமில்லாமல் இந்த கட்டுரை தமிழ் சினிமாவின் வியாபார ரிப்போர்ட். அந்த வகையில் இந்த வருட சூப்பர் ஹிட் படம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Ravi said...

There was a film called Aaravan.

வருண் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நண்பன் விமர்சனத்தை இந்தத் தளத்தில் படித்ததாக எனக்கு ஞாபகம். ஆனால் அதை இப்போக் காணோம்?

எங்கே போச்சு?

ஏன்?

இப்படி காணோமா போச்சுனா நீங்க அன்னைக்கு என்ன சொன்னீக, இப்போ என்ன சொல்றீகனு நாங்க எப்படி தெரிஞ்சுக்கிறது?

அநியாயம் பண்ணாதீங்கப்பா!

Kite said...

Why you did not mention about 3 and Aravan?