Thottal Thodarum

Dec 1, 2012

நீர்ப்பறவை

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் தேசியவிருதை தட்டி வந்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம்.  அதே தயாரிப்பாளருக்கு படம் ஆரம்பிக்க இருந்து பின்பு உதயநிதிஸ்டாலினின் தயாரிப்பில் இப்போது வெளி வந்திருக்கிறது. 


25 வருடத்திற்கு முன் கடலுக்கு சென்று திரும்பாத கணவனுக்காக காத்திருக்கிறாள் அவனது மனைவி. ஒரு கட்டத்தில் அவனது எலும்புக்கூட அவளின் வீட்டிற்குள்ளேயே கண்டுபிடிக்கப் படுகிறது. காணாமல் போனவனின் பிணம் எப்படி வந்தது என்று போலீஸ் விசாரணை செய்ய, அவளோ தன் கணவனை தான் தான் கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறாள். எப்படி? எதற்காக? என்பதை 25 வருடங்கள் பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், சர்ச்சில் ஊழியம் செய்யும்  கன்யாஸ்திரியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆனா காதலை  மீனவ பேக்ரவுண்டில் ஆர அமர சொல்லியிருக்கிறார்கள்.
குடிகார அருளப்பசாமியாக விஷ்ணு. முதல் பாதி முழுவதும் சதா குடித்துக் தெருவோரம் வீழ்ந்து கிடக்கும் கேரக்டராய் வலம் வரும் காட்சிகளில் இவரது நடிப்பு  கொஞசம் ஓவர் தள்ளாட்டமே. குடித்து முடித்து தூங்கி எழுந்து கூட தாள்ளாடுகிறார். காதல் வயப்பட்டதும் காதலியின் வார்த்தையை சவாலாய் ஏற்றுக் கொண்டு கெஞ்சும் இடங்களில் நெகிழ வைக்கிறார்.

எஸ்தராக சுனைனா. குடிகாரனான அருளப்பனுக்காக அவன் தலை மேல் கை வைத்து வேண்டுமிடமாகட்டும், அடுத்த முறை அருளப்பன் காதல் வயப்பட்டு, அவளை பார்க்க வருகையில் சாத்தானே அப்பாலே போ என்று ஆணையிடும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். என்னதான் கடல்புறத்தில் இருக்கும் மக்களிடம் ஒருவிதமான கருத்த மினுமினுப்பு இருக்கும் என்றாலும் ஆனாலும் அநியாயமாய் கருக்க வைத்து இவரைக் காட்டியிருக்க வேண்டாம். எஸ்தருக்கும்  அருளப்பசாமிக்குமான காதலில் அழுத்தம் மிஸ்ஸிங். இவரது வயதான காலத்தில் இவருக்கு பதிலாய் நந்திதா தாஸ் வருகிறார். இயக்குனர் ஏதோ ஒரு பெரிய இம்பாக்டை கொடுக்கும் என்று நினைத்து இவரை நடிக்க வைத்தது வீணாகிப் போனது என்றே சொல்ல வேண்டும். ஒரு தீடீர் காதலாய் அரம்பித்த எஸ்தர், அருளப்பசாமியின் காதலில் அவனைப் பிரிந்து வாடும் மனைவியாய் சுனைனாவையே காட்டியிருந்தால் கொஞ்சம் நெகிழ்ச்சியும், அய்யோ பாவம் இப்படி கஷ்டப்பட்டு ஜெயிச்ச இவளோட வாழ்க்கை இப்படி ஆகணுமா? என்ற பச்சாதாபம் கிடைத்திருக்கும். சுனைனாவுக்கு பதிலாய் நந்திதாதாஸ் வரும் போது ஏதோ வேறு வேறு நபர்களுக்கிடையேயான கதை போல நம்மால் இணைய முடியாததால் கிடைக்க வேண்டிய பாதிப்பு இல்லாமலேயே போய்விடுவது வருத்தம்.
நகைச்சுவைக்காக பாண்டி, தம்பி ராமையா. இருவரும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்ட மட்டுமே பயன் படுகிறார்கள். சாராயம் விற்கும் எபினேசர்,  மீனவராக வரும் அருள்தாஸ், படகு செய்து தரும் பாயாக வரும் சமுத்திரக்கனி என்ற கேரக்டர்கள் எல்லாமே பல இடங்களில் க்ளிஷேவாக பயன்பட்டிருக்கிறார்கள்.  படத்தில் ரெண்டு மூன்று காட்சிகள் ஒரு நரிக்குறவர்  அருளப்பசாமி மொடாக் குடியனாக  இருக்கும் போதும் அவர் ரொம்ப நல்லவர் என்று சப்போர்ட் செய்து பாராட்டுவார். திருந்தி வந்து சமபந்தி போஜனத்தின் போது சப்போர்ட் செய்வார். இவருக்கு மட்டும் எப்படி தெரியும் இவர் ரொம்ப நல்லவர் என்று தெரியவில்லை. சரண்யா அம்மாவாக நடிப்பதற்கே பிறந்திருப்பார் போல. அவ்வளவு இயல்பு, அவரின் பேச்சில், வாஞ்சையில், அழுகையில் எல்லாம். குடிப்பழக்கத்தை நிறுத்த ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டு, வார்டு பாயிடம், காசைத் திணித்து, மொல்ல திருத்துங்க என்று சொல்லுமிடம் சூப்பர். பிள்ளையை அடித்ததற்காக சண்டைப் போட்ட பாயிடமே, தன் பிள்ளை தலை நிமிர பழைய சண்டைய நினைப்புல வச்சி மாட்டேன்னு சொல்லிராத என்று கெஞ்சும் இடத்தில் நெகிழ வைக்கிறார் பூ ராம்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்களில் முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு. கடலையும், அதன் பின்னணியில் இயங்கும் மீனவ கிராமத்தை, தேவாலயத்தை, டாப் ஆங்கிள் கிராம ஷாட்களில் எல்லாம் பிக்சர்க்யூ என்று சொல்லும் படியான ஷாட்களில் கலங்கடிக்கிறார் பாலசுப்ரமணியம். ஆனாலும் பல இடங்களில் ஓவர் டி.ஐ செய்ததினால் ஒரு அன்னியத்தன்மை தெரிகிறது. பாதி கடல் நீலம், சிவப்பு என்ற காம்பினேஷன் விஷுவலாய் நன்றாக இருந்தாலும் உறுத்துகிறது. ரகுநந்தனின் இசையில் பரபர பாடலும்,  தேவன் மகனே பாடலும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்னணியிசை இரைச்சல்.
வசனம் இயக்குனரும், ஜெய மோகனும் எழுதியிருக்கிறார்கள். மீனவனுக்குன்னு எங்காயாச்சும் தனி தொகுதியிருக்கா? என்பதில் ஆரம்பித்து,"ஒருத்தனுக்கு அல்சரும், காதலும் வராம குடிய நிறுத்த மாட்டான்”  என்று வாத்யார் சொல்லுமிடம், மேலும்  ஆங்காங்கே மீனவர்களுக்கான அங்கீகாரத்தைப் பற்றி நச் நச்சென பஞ்ச் டயலாக்காய் அள்ளி வீசியிருக்கிறார்கள். முஸ்ஸிம் மக்கள் ஆதரிக்கவில்லைன்னா திட்டுறீங்க.. சரி கூட்டமா வந்தா தீவிரவாதம்னு சொல்றீங்க. அதுக்காக நாங்க வாராமய இருக்க முடியும் என்பது போன்ற வசனங்கள். மீனவனை கடலில் சுட்டுக் கொள்வது, தக்கையைப் போட்டு வைத்து அது காற்றில் ஆடி ஒரு கிலோமீட்டர் தள்ளி போய் நம்ம பார்டர் எதுன்னு தெரியாமல் இருப்பது. என்பது போன்ற பல மேட்டர்களை மெயின் விஷயமாய் இல்லாமல் ஆங்காங்கே தூவி விட்டார்ப் போல சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் நிறைய இடங்களில் வசனங்களாலேயே கதை சொல்லியிருப்பதும் டாக்டர் கோட்டு போட்டு வந்தவரைப் பார்த்து “அடடே டாக்டர் வந்திட்டாரே” என்று சொல்வது போல பல இடங்களில் விஷுவலாய் தெரியும் விஷயத்தை மீண்டும் வசனத்தில் சொல்வது எரிச்சல் அடைய வைக்கிறது. குறிப்பாய் நடுக்கடலில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்க, அநாதையாய் அழும் குழந்தையை தூக்கப் போக்கும் லூர்து எதற்கு “யாரோ ரெண்டு பேர் செத்துக் கிடக்காங்களே?’ என்று டயலாக் பேசுமிடம் ஒர் உதாரணம் இது போல பல இடங்களில் வசனகர்த்தா நானிருக்கிறேன் என்று கட்டியம் கூறியிருக்க வேண்டாம்.
மீன் பிடியில்லாத நாட்களில் வெளி வேலைக்குப் போய் வேலை செய்யும் இடத்தில் அந்த முதலாளியின் தங்கை விஷ்ணுவின் மேல் காதல் வயப்படுவது, அதை நாசுக்காக விஷ்ணு விலக்குவது நன்றாக இருந்தாலும் கதைக்கு அவர் படகு வாங்க உதவ திணித்தாகவே படுகிறது. கதையின் முதல் பாதியில் விஷ்ணு குடிகாராக வலைய வருவதும், மருத்துவமனையில் திருந்துவதுமாகவே முழு பாதியும் போவது படு தொய்வாக படுகிறது.  காதல் வந்து கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுத்தாலும், அதை நிறைவேற பெரிய தடங்கல்கள் இல்லாததால் கிடைத்த சுவாரஸ்யம் குறைந்து போய்விடுகிறது. முதல் காட்சியில் தன் கணவனின் வீட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்தே அவள் தன் கணவனை கொல்லவில்லை என்பது தெரிந்த விஷயமாகவே இருப்பதால் என்ன ஆச்சு என்ற ஆர்வம் மேலிடவேயில்லை.  மனைவியிடம் கூடிவிட்டு காணாமல் போனவனை பிரிகையில் படம் பார்க்கும் நமக்கு துக்கம் தொண்டையை அடைக்க வேண்டிய இடத்தில் சுனைனாவுக்கு பதிலாய் வயதானவளாய் காட்ட நந்திதாதாஸைக் காட்டியது ஒரு வேளை சுனைனாவே நடித்திருந்தால் நெகிழ்ச்சியாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. 25 வருடத்திற்கு முன் விஷ்ணு வைத்திருக்கும் கிருதா போலத்தான் எல்லோரும் வைத்திருந்தார்களா?  பீரியட் படம் என்பதை விளக்க, ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கு பழைய கால உடைகளைப் போட்டதைத் தவிர வேறெதுக்கும் டெக்னிக்கலாகவோ, அல்லது ஆர்ட் டைரக்‌ஷனிலோ பெரிதாய் மெனக்கெடவில்லை. மீனவர்களாய் பிறக்காதவர்கள் மீன் பிடிக்க படகில் ஏற்ற மாட்டார்கள். அங்கே இங்கே கொஞ்சம் லைட்டான மீனவர்களுக்கான அரசியல். இலங்கை அகதியின் குழந்தை என்பதைப் போன்ற விஷயங்களை தொட்டும் தொடாமல் போயிருப்பதால் அதன் மூலமாய் கிடைக்க வேண்டிய பாதிப்பும் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆரம்பம் முதல் முடியும் வரை பெரிய திருப்பங்கள் ஏதுமில்லாமல்  மெதுவாகவே சென்று அழுத்தம் குறைந்த அழகியல் படமாக மட்டும் அமைந்தது கொஞ்சம் வருத்தமே.
கேபிள் சங்கர்



Post a Comment

8 comments:

Ravikumar Tirupur said...

சற்று ஏமாற்றமே

Unknown said...

எதிர் பார்த்த படம் இப்படிச் சொதப்பி விட்டது

www.saaddai.com

Unknown said...

good

butterfly Surya said...

மிகவும் எதிர்பார்த்திருந்தேன். நிறைய வருத்தமே... Seenu, Better luck next time. :(

Lakshman said...

சங்கர் சார், தெலுங்கு சினிமா ஏன் ஒரு லெவல்க்கு மேல் போக மறுக்கிறது? நேஷனல் அவார்ட்ஸ் எடுத்து கொண்டால் அவார்டுக்கு லாயக்காக ஒரு படமும் இல்லை என்று வருடா வருடம் தேர்வு குழு கை விரிக்கிறது...அதுவே உண்மையும் கூட.. அந்த மக்கள் இந்த நான்கு கதைகளே போதும். இதை வைத்து மட்டும் படம் எடுங்கள் என்ற மனோநிலைக்கு வந்துவிட்டார்களா? கொஞ்சம் நீங்கள் இதை பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். Sorry for the digression but I desperately wanted to know your opinion on Telugu cinema...Even Kannada cinema makes some gems amongst the routine ones but Telugu cinema does not even try...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அட விடுங்க !!! நம்ம தலிவர் family க்கு ..ஒரு நஷ்ட கணக்கு கட்டலாம் ....அம்புட்டுத்தான்

kanavuthirutan said...

நீர்ப்பறவை நல்ல முயற்சி.... அதெற்காக (மட்டுமே) பார்க்கலாம்...
விமர்சனத்துக்கு நன்றி கேபிள்ஜி....

மாதேவி said...

நன்றி.