Thottal Thodarum

Jan 29, 2013

விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூபம் திரைபடத்திற்கு தடை என்று அறிந்ததுமே அஹா.. ஏற்கனவே புக் பண்ண டிக்கெட் போச்சே.. என்ற வருத்தத்தை விட, படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் அதிகமாய் இருந்தது. சரி என்னடா செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது,  வழக்கப்படி மாநிலம் விட்டு மாநிலம் படம் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவோடு, மணிஜியை தொடர்பு கொள்ள நினைத்து போனை எடுக்க, அவர் அழைத்தார். “என்ன தலைவரே.. இப்படி பண்ணிட்டானுங்க?.” என்றதும் நான் ஆந்திரா போகும் ஐடியாவை சொன்னதும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு தெலுங்கு தெரியாது இருந்தாலும் போய் பார்த்துடுவோம்” என்றவர், “இரு பெங்களூர்ல பிரபு கிருஷ்ணா டிக்கெட் புக் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தாரு. அங்க கிடைச்சுதுன்னா தமிழ்லேயே பாக்கலாமே” என்றதும் எனக்கும் ஒர் நப்பாசை சரி என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் பிரபு கிருஷ்ணாவிடம் தொடர்பு கொண்டு , போன் நம்பர் வாங்கி, 25ஆம் தேதி ஆறு மணிஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியதை கன்பார்ம் செய்ய, நான், மணிஜி, கே.ஆர்.பி, பபாஷா சங்கர் ஆகியோர் காலை எட்டு மணிக்கு மணிஜி வீட்டில் ஆசெம்பிள் ஆவதாய் முடிவெடுத்தோம். ராத்திரி பதினோரு மணிக்கு  மணிஜி ”தெளிவாய்” ப்ரோக்ராமை ஞாபகப்படுத்தினார்.


வீட்டில் வெளியே போறோம் ஒருநாள் ஆவும் என்றதும் எங்க விஸ்வரூபம் பாக்குறதுக்கா? என்றாள் மனைவி. ஆமாம் என்றதும். இது எல்லாம் உங்களூக்கே நியாயமா இருக்கா? என்றவளை நேராக பார்த்து “நானென்னா எனக்காகவா பாக்குறேன். எனக்குன்னு சமூக பொறுப்பிருக்கு இல்லை அதை செய்ய வேணாம்?” என்று சொன்னதும் அடிக்காத குறையாய் முறைத்தாள். பைக்கை எடுத்துக் கொண்டு மணிஜியின் வீட்டிற்கு நானும் கே.ஆர்.பியும் போய் சேர்ந்த நேரத்தில், பபாஷாவும் வந்துவிட, மணிஜியின் பெண்  நிலா பெருமினாள். வண்டிய எடுத்துக் கொண்டு கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எதுக்கும் போன் போட்டு கேட்டுட்டு பெங்களூர் போவோம் என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் பிரபு கிருஷ்ணாவுக்கு போன். அவரைக் கேட்டால் தியேட்டருக்கு போன் செய்து சொல்கிறேன் என்றார். வண்டி பாட்டிற்கு  பெங்களூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்க, பிரபுவிடமிருந்து போனில்லை. ஃபேஸ்புக்கில் படம் பார்க்க பெங்களூர் செல்வதாய் போட்டிருந்ததால் ஓரே போன் கால்கள். எல்லோரையும் காண்டாக்கிக் கொண்டே இருந்த என்னை பார்த்து மற்றவர் உடன் வந்தவர்கள் கடுப்பானார்கள். அப்போது பீட்சா இயக்குனரிடமிருந்து போன் வந்தது. அந்தக் கால் எங்கள் பயணத்திற்கு ஒர் திருப்புமுனையாய் அமைந்தது.

”சார்.. படம் பார்க்க  பெங்களூருக்கு போறீங்களா? நானும் போகலாம்னுதான் நினைச்சேன். ஆனா இன்னைக்கு ஒரு மீட்டிங். அதனால வரலை. ஆனா பெங்களூர்ல ரிலீஸ் ஆகலையாம் என் அஸிஸ்டெண்ட் ஒருத்தர் அங்கே தான் இருக்காரு. தியேட்டர்லேர்ந்து போன் பண்ணாரு எதுக்கு விசாரிச்சுக்குங்க” என்றதும் வண்டியை ஓரம் போட்டு விட்டு மீண்டும் பிரபு கிருஷ்ணாவுக்கு அடிக்க, அவரும் ஆமா காலை ஷோவெல்லாம் கேன்சல் மத்யானத்துக்கு மேலத்தான் தெரியும் அதனால நான் சொன்னதும் கிளம்புங்க என்றார். இவ்வளவு தூரம் கிளம்பி விட்டு படம் பார்க்காமல் போக எங்களுக்கு விருப்பமில்லை. “தலைவரே.. எப்படி இருந்தாலும், தடா, சூலுர் பேட்டையில தெலுங்குல இருக்கும். தமிழ் வர்ஷந்தானே ப்ரச்சனை விடுங்க வண்டிய்” என்று வண்டியை விரட்டினோம். 

தடாவை அடைந்ததும் டீசல் போட ஒரு பங்கில் நிறுத்தினோம். அங்கேயிருந்த பங்க் ஆளிடம்  நான் தெலுங்கில் விஸ்வரூபம் படத்தைப் பற்றி கேட்க, அவர் பக்கத்தில் சூலூர் பேட்டையில் ஓடுவதாய் சொன்னார். உடனடியாய் சூலூர் பேட்டைக்கு வணடியை விட்டோம். ஊருக்குள் நுழைந்ததுமே தியேட்டர் இருந்தது. மோஹன் மஹாலோ என்னவோ. மொத்த தியேட்டரும் காலியாய் இருக்க, வாசலில் ஆட்டோவில் விஸ்வரூபம் தெலுங்கு பேனரோடு மைக் செட் கட்டிய வண்டி மட்டும் இருந்தது. உள்ளே போய் கேட்ட போது “மார்னிங் ஷோ நலபை நிமிஷாலுக்கு தரவாதா போலீஸ் ஒச்சி ஆபேசினாரு” என்றார். மணிஜி என்னை பார்க்க, தெலுங்கு தெரிந்த திமிரில் பந்தாவா நான் அவர்களிடம் “அவுனா?” என்று கேட்டுவிட்டு மணிஜிக்கு ட்ரான்ஸுலேட் பண்ண திரும்ப “என்ன பாதில நிறுத்திட்டாங்களாமா?’ என்று பல்பு கொடுத்தார்.  சென்னையிலேர்ந்து வர்றோம் என்று தியேட்டர் ஆட்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்தவர் “நீங்களாச்சும் இப்ப வர்றீங்க காலீல ஷோ ஹவுஸ்புல் எல்லாரும் சென்னை ஆளுங்க. .பக்கத்து ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி தங்கிட்டு இருந்தாங்க பாவம்” என்ற போது எங்களது பயணமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று பட்டது. ஆசைக்கு தியேட்டர் வாசலில் இருந்த 32 ஷீட் போஸ்டரின் முன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கூட்டத்தில் ஒருத்தர் சொன்னார். படம் ப்ரச்சனைக்கு காரணம்  முஸ்லிம் ப்ரச்சனை எல்லாம் கிடையாதுங்க  பெருமாள் தான் என்றார்.
இதென்னடா கூத்து என்று அவரை பார்த்த போது “ஆமாங்க டி.டி.எச்சுல போடுறதுக்கு வந்த போது திருப்பதிலேயும் பெருமாள் இருக்காரு வீட்டிலேயும் இருக்காருன்னு சொனனாருல்ல.. வீட்டுல இருக்கிறது திருப்பதி பெருமாளாகுமா? அதான் சாமி குத்தம் ஆயிருச்சு” என்றார். எங்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அடுத்து எங்கு போவது என்றே தெரியவில்லை நெல்லூர் எஸ்2வுக்கு போன் செய்தோம். அவர்கள் படம் இருக்கிறது என்றும் டிக்கெட் அவைலபிள் என்று காலையில் போன் செய்த போதே சொன்னார்கள்.  போன் லைனே போகவில்லை. நெல்லூரில் உள்ள என் நண்பரிடம் போனடித்து கேட்க, அங்கே இல்லை என்றார். ஃபேஸ்புக்கில் பெங்களூரில் படம் ஓடுகிறதா? என்று கேட்டதற்கு இலலை என்று பதில் வர, எங்கே போவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் எல்லோரும் காரின் முன் நின்றோம்.

ரொம்ப நாளா காளஹஸ்தி போகணும்னு சொன்னாங்க போவமா? என்றார் மணிஜி. எல்லோரும் தயாராக... “போய் கமலுக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணிருவோம்” என்று தமாஷாக கிளம்ப, நேரே கோயிலுக்குப்  போய்விட்டு நல்ல தரிசனம். எல்லாம் முடிந்து, புளியச்சாதமும், வடையும், லட்டுவையும் ப்ரசாதமா மதிய லஞ்ச் ரேஞ்சுக்கு வாங்கி அங்கே உட்கார்ந்து ஒரு கட்டு கட்டிவிட்டு, வெளியே வந்த போது மணி கிட்டத்தட்ட இரண்டரை. மெதுவாக காரை வெளியே எடுத்து ஒன்வேயில் திரும்பும் போது அதுவரை கண்ணில் படாத விஸ்வருபம் போஸ்டர் கண்ணில் பட, ஜாங்கிரி ஜாங்கிரியாய் எழுதியிருந்த எழுத்த பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒர் ஆர்வகுட்டியிடம், தெலுங்கில் விசாரித்து விட்டோம் தியேட்டரை நோக்கி,  ஒரு பழங்கால தியேட்டர் அது. உள்ளே ஆட்கள் இருப்பது போலவே தெரியவில்லை. காரை சந்தேகமாய் உள்நுழைத்ததும், டிக்கெட் கொடுக்குமிடத்தில் “பிக்சர் உந்தா?”என்று சந்தேகமாய் கேட்க, மேனேஜர் “உந்தி காணி சீட் லேது” என்றார். எங்களுக்குள் பரபரப்பு தொற்றி கொள்ள, “பரவாலேது. எகஸ்ட்ரா சீட் உந்தி காதா?” என்றதும் அவர் கண்ணில் பல்ப் எரிய, “உந்தி ஓகே அண்டே டிக்கெட் தீஸ்கோண்டி” என்றதும் அவசர அவசரமாய் டிக்கெட் எடுத்து, உள்ளே நுழைந்தால் தியேட்டர் ஜாம் பாக்ட்டு. ஓர் ஓரமாய் நான்கு எகஸ்ட்ரா சீட் கொடுக்க உட்கார்ந்தோம். எடுத்த மாத்திரத்தில் கமல் விஸ்வரூபம் எடுக்கும் காட்சி. இடைவேளை விட்ட போது, பபாஷா மணிஜியிடம் “தலைவரே உங்க கார் சாவிய கொடுங்க” என்றார். எதற்கு என்றபோது ”அவசரத்துல புல் கூலிங் பவர் க்ளாஸை போட்டுட்டு வ்ந்துட்டேன். படம் பூரா கருகும்முனு இருக்கு. காரை திறந்து கண்ணாடி எடுக்கப் போனா சீன் மிஸ்சாயிரும் அதான்” என்றார்.

படம் முடித்து வெளிவந்த போது தான் தெரிந்தது இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் தமிழநாட்டு ரிஜெஸ்ட்ரேஷன். மணிஜி முதலில் விட்ட அரை மணி நேரத்தை மீண்டும் பார்க்க  ஆவலாக.. மேனேஜரிடம் என் இன்ப்ளூயன்சை யூஸ் செய்து இலவசமாய் முதல் அரை மணி நேரத்தை பார்க்க அனுமதி வாங்கி விட்டு, தாக சாந்திக் கடையில் விற்ற கீரை வடையும், போண்டாவும் அதிரிப் போயிந்தி. கூடவே கொடுத்த காரச் சட்னி ஸ்பெஷல் காம்பினேஷன். வாயில் போட்டால் கரைந்தது. இத்தனைக்கும் வெறும் இரண்டு ரூபாய்தான். டிவைன் காம்பினேஷன்.  மீண்டும் முதல் அரை மணி நேர படம் பார்த்துவிட்டு, மீண்டும் தாகமெடுக்க, தேவையானதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்பும் வழியில் ஒர் இருண்ட பாதையில் இருந்த சின்ன பாலத்தின் கட்டையில் உட்கார்ந்து படத்தைப் பற்றி பேசியபடி கடந்த இரவு மீண்டும் திரும்ப வராது.   வாழ்க்கையில  எது எப்படி நடக்கணும்னு விதி இருக்கு போல.. இல்லாட்டி கர்நாடகாவுக்கு படம் பார்க்க போயி, ஆந்திராவுக்கு வந்து, படமில்லாம ரொம்ப வருஷமா போகவேண்டியிருந்த காளஹஸ்திக்கு போய், கோயில் தரிசனத்தையும் கமலின் விஸ்வரூப தரிசனத்தையும் ஒருங்கே காணக் கிடைத்திருக்குமா?
 கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

bandhu said...

பிரமாதமான அனுபவம்!

துளசி கோபால் said...

கடவுள் இருக்கான்னு காமிச்சுக்க இப்படி விஸ்வரூபமெடுக்கவேண்டி இருக்கு அவருக்கு! ஐ மீன் கடவுளுக்கு:-)))

அவுனு....பிக்சரு பலே பாகுந்தி காது?

saravanapandi said...

தலைவரே படத்துல கதை நல்லா இருக்கோ இல்லியோ நீங்க படம் பார்த்த கதை அருமைய இருக்கு

தாஸ். காங்கேயம் said...

ஆக, தலைவர் படத்திற்காக மூன்று மாநிலத்திலும் கால் பதித்து 'விஸ்வரூபம்' எடுத்திட்டீங்க போல.

அது சரி .. டிவைன் காம்பினேஷன் என்றீர்களே? அது படத்துக்கும் சேர்த்து தானே?
தாஸ்- திருப்பூர்

saravanan selvam said...

நல்லதொரு பயணம்.

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

Damodar said...

And we have forgetten 16hrs power cut !!

Anonymous said...

நாடு விட்டு நாடு தாண்டி நான் பார்த்த அனுபவத்தையும் மிஞ்சிவிட்டது உங்களது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு சினிமாவே எடுக்கலாம் போல இருக்கே!

R. Jagannathan said...

நல்ல அனுபவம்! பகிர்ந்ததற்கு நன்றி! காளஹஸ்தி ஆண்டவர் உங்கள் படமும் சீக்கிரம் வெளி வந்து வெற்றி அடைய ஆசீர்வதிக்கட்டும். - ஜெ .

Unknown said...

ஜாலி பயணம்

DR said...

ஒரு பயணக்கட்டுரை, ஒரு சினிமா விவரம் அப்புறம் கொஞ்சம் சாப்பாட்டுக்கடை விஷயம்.... எல்லா மேட்டரையும் ஒரே பதிவுல கொஞ்சம் மசாலா சேர்த்து நல்ல காம்பினேஷன்-ல ஒரு கலக்கல் பதிவு....

மாதேவி said...

சுவாரஸ்யமான பயணம்.