Thottal Thodarum

Feb 12, 2011

பயணம்

payanam4 மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்யாசமான தமிழ் சினிமா அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆடம்பரம் ஏதுமில்லாமல் திடீரென ரிலீசான போதும் முக்கால் வாசி தேவி பாரடைஸ்  புல்லானதில் முதலில்  சொன்ன ரெண்டு பேரின் கூட்டணிக்கு கிடைத்த மரியாதை என்று தெரிகிறது.



payanam-movie-review
சென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ஸ்டார் ஜெட் விமானம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன் நடத்திய போராட்டத்தில், தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டு வெடித்து விமானத்தில் இன்ஜின் பழுதாகி வேறு வழியில்லாமல் திருப்பதியில் தரையிரங்குகிறது. தீவிரவாதிகளின் தலைவன் யூசுப் கானையும், 100 கோடி ரூபாய் பணமும் கேட்டு தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். அரசு  அதிகாரிகள்  பிரகாஷ் ராஜ் தலைமையில் கூடி மாய்ந்து மாய்ந்து விவாதிக்க, கமேண்டோ படை தலைவரான நாகார்ஜுன் அதிரடியாய் உள்நுழைந்து போய் தாக்கி காப்பாற்றலாம் என்று சொல்ல எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார்கள்? யூசுப் கானை விடுதலை செய்தா? அல்லது கமாண்டோ படையை வைத்தா என்பதை சுறுசுறுவென சொல்லியிருக்கிறார்கள்.

டாக்டரான ரிஷி, இளம் பெண் சனாகான், சர்ச் பாதர் எம்.எஸ்.பாஸ்கர், அரசுத்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ், கமாண்டோவான நாகார்ஜுன், ஒரு நடிகரின் தீவிர விசிறியான மன்னிச்சூ சாம்ஸ், எக்ஸ் கர்னலான தலைவாசல் விஜய், வாஸ்து சாஸ்திர நிபுணர் மனோபாலா, மிமிக்கிரி படவா கோபி, வேலை தேடி இண்டர்வியூக்கு போகும் குமரவேல், சினிமா டைரக்டர் பிரம்மானந்தம் என்று ஒரே நட்சத்திர பட்டாளம். அனைவருமே சிறிது நேரம் வந்தாலும் தம்தம் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார்கள்.

payanam
குறிப்பாக நாகார்ஜுன் வரும் இரண்டாவது பாதி அருமை. அதிலும் கடைசி இருபது நிமிடங்கள் நல்ல விறு விறுப்பாக போகிறது. நாகார்ஜுனை பொறுத்த வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாகத் தெரிந்தாலும் பெஸ்ட் ஜாப் டன். பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும் நடிப்பு.

ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். அதே போல எடிட்டர், பின்ன்ணியிசை அமைத்த பிரவீன்மணீ போன்றவர்களின் உழைப்பு கச்சிதம்.

payanam1குறையென்று பார்த்தால், தமிழ், தெலுங்கு என்று ரெண்டு மொழிகளில் எடுத்திருப்பதால், நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல் இருப்பதும்,  பயணிகளில் ஒரு பாதிரியாரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட மாமா, மாமியும் கேரக்டர்கள்தான். அது மட்டுமில்லாமல் கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பணயக்கைதியாக இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம். பிருதிவிராஜ், சாம்ஸ் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை பாருங்கள். எவன் கடத்தினால் எனக்கென்ன சாப்பாட்டைக் கொடு என்பது போது சாப்பிட்டுக் கொண்டிருப்பதை.

payanam3
ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான் விதத்தில் கொடுப்பதில் ஆர்வமிக்கவர். அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார். மெல்ல மெல்ல விமானத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகளையும், சொல்லி படத்தில் உட்கார வைத்து விடுகிறார். தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் விடும் சூப்பர் ஸ்டார்களை கிண்டல் செய்திருக்கிறார் பாருங்கள் அது தூள். சாம்ஸும், பிருதிவிராஜும் கலக்கல். ரிஷிக்கும், சனாகானுக்குமான காதல் ரொம்ப கேஷுவல். முதல் பாதியில் கடத்தல்காரர்களினால் கடத்தப்படும் பிரச்சனையும், அங்கிருப்ப்வர்களின் மனநிலையையும் மெல்ல, தன் போக்கில் விவரிப்பது கொஞ்சமே கொஞ்சம் லெதார்ஜிக்காக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படியான இரண்டாம் பாதியிருப்பதால் இந்த குறையெல்லாம் தெரியவில்லை. எல்லாம் வழக்கப்படி போகிறதே என்று நினைக்கும் போது, இடைவேளையின் போது வரும் ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. யூசூப் கானைப் போல இருக்கும் டபுளை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் அவ்வளவு அதகளத்திலும் காமெடி. டைரக்டராய் வரும் பிரம்மானந்தமும், கம்யூனிசம் பேசும் குமரவேலும் கச்சிதம்.

சும்மா அதிரடியாய் சீன் செய்கிறோம் என்று அந்தரத்தில் பறந்து சண்டையிடாமல், ஒரு கமாண்டோ ஆப்பரேஷனை எக்ஸிக்யூட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அதன் போக்கில் செயல்படுவதை மிக அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.
பயணம் – அதிரடியான பயணம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

Prasanna Rajan said...

நல்லதொரு விமர்சனம் பாஸ். பாத்துரலாம்...

Suthershan said...

இப்பவே டிக்கெட் புக் பண்ணிடறேன்... அந்த ஏர்போர்ட் செட்டை பத்தி சொல்லவே இல்ல...

டக்கால்டி said...

வசிஷ்டரிடம் இருந்து வாழ்த்து வாங்கிவிட்டது இந்த படம்... :-)
ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல படம் என்ற உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது சார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

today will go

Ganesan said...

கேபிள்,

காந்தகார் விமான கடத்தலின்போது பயணித்த பயணிகளின் அப்பொழுதிருந்த நிலைமைகளை உள்வாங்கி, நேரில் சந்தித்து எடுத்திருப்பார் போல இயக்குனர்.

வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் மீண்டும் ஒருமுறை நல்ல படம் கொடுத்தற்க்காக.

வாழ்த்துக்கள் கேபிள், உங்கள் கடமைகளுக்காக.

கார்க்கிபவா said...

//ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமான் விதத்தில் கொடுப்பதில் ஆர்வமிக்கவர். அதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் மூன்றாவது காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்.//

இதில் அந்த “மிக்கவர்” “விடுகிறார்” யார் என்று சொல்லவே இல்லையே.. இயக்குனர் என்று யூகிப்பது எளிதுதான் என்றாலும் அவர் பெயர் எல்லோருக்கேம் தெரியாது அல்லவா?

அப்புறம் லிப் சிங். இதில் எப்படியோ தெரியல. சிறுத்தையில் சந்தானத்துக்கே பல இடங்களில் சிங் ஆகவில்லை. நேத்துதான் பார்த்தேன்

Unknown said...

//நிருபர்களின் வசனங்களில் டப்பிங் சிங்க் ஆகாமல் இருப்பதும், பயணிகளில் ஒரு பாதரும், இருதய நோய் குழந்தையும், லொட லொட மாமா, மாமியும் கேரக்டர்கள்தான்.//


புரிகிறது

Unknown said...

ராதா மோகனுக்காக விமர்சிக்காமல் நடுநிலையாக இருக்கிறது விமர்சனம்.

Unknown said...

ராதா மோகனுக்காக விமர்சிக்காமல் நடுநிலையாக இருக்கிறது விமர்சனம்.

Unknown said...

நன்றி. பாத்துடுவோம்..

அருண் said...

நல்ல விமர்சனம்,பார்க்கணும்.
-அருண்-

King Viswa said...

பாவங்க நம்ம பிரகாஷ் ராஜ், தன்னுடைய முன்னால் மனையின் வீட்டை எல்லாம் அடகு வைத்து படத்தை ரிலீஸ் செய்து உள்ளார், படம் ஓடணுமே?

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

Raju said...

\\கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பயணக்கைதியாக இருக்கிறோம்\\

பணயக்கைதி ஓகே! அதென்னண்ணே பயணக்கைதி..?
:-)

Cable சங்கர் said...

vidura vidura.. suuna panaa.. sari pannidalama raju..:))

rajasundararajan said...

//கடத்தப்பட்ட விமானத்தில் பல பேரின் முகத்தில் தாங்கள் பணயக்கைதியாக இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. முக்கியமாய் துணை நடிகர்களிடம்.//

'ரெண்டு இட்லி ஒரு வடை' என்று வழங்கும் குற்றச்சாற்று சரிதானோ?

இஸ்லாமிய, கிறிஸ்துவ நன்நெறிகள் என்றால் இன்ன மாதிரியாக்கும் என, இயக்குநர் தாம் புரிந்துகொண்டதைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்:

"தீவிரவாதிகளே ஆனாலும் நாங்க (இஸ்லாமியர்கள்) உங்க பெண்களைத் தொடுறதில்ல. உங்க நாட்டுல அரசாங்கமே கற்பழிக்கிது. காஷ்மீரைப் பாருங்க!", "அந்த இருநூறு கோடிப் பணம் கேட்டோமே, அது எங்களுக்கு வேண்டாம். எங்க கொள்கைக்குப் புறம்பானது."

"'காண்டம்' போட்டாயா இல்லையா? போய்யா, எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, இந்த நேரத்துல வந்துட்டாரு பாவ மன்னிப்புக் கேட்க", "இங்கெ இருக்கிற எல்லாருக்கும் குடும்பம் இருக்கு. எனக்கு ஆண்டவரெ விட்டா யாரும் இல்ல. அடுத்து ஒரு ஆளெ நீ சுடப் போறேயின்னா என்னையெச் சுடு!"

Anonymous said...

>>> படம் பார்த்தேன். ராதா மோகன் முத்திரை பதித்து விட்டார். சூப்பர்!

Anonymous said...

>>> "பயணக்கைதி" ஓகே! அதென்னண்ணே பணயக்கைதி???. பயணம் செய்கையில் சூழ்நிலை கைதியாக இருப்பவர்கள் 'பயணக்கைதிகள்' ஆக இருக்கக்கூடாதா??? சொற்குற்றம் உள்ளது. பாண்டிய மன்னன் சபையில் இத்தகைய செயல் நடக்கலாமா..அய்யகோ!! நீதி எங்கே. தர்மம் எங்கே!!!!

சீனு said...

http://www.tamilpaper.net/?p=2565

Unknown said...

@Karki Siruthai tamil movie ah?

Suresh Kumar said...

பயணம் முடிவு என்னவோ சுபமா தான் முடியுது. ஆனாலும் ஒரு திருப்தி இல்லை.
my review

உலக சினிமா ரசிகன் said...

ராதாமோகனின் பயணம் தமிழ்சினிமாவை மேல்தளத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி.
உலகசினிமா பார்த்து உயர்ந்த ரசனை பெற வாருங்கள்.
http://worldcinemafan.blogspot.com/2011/03/gigante-xxl-2009.html